வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி விதம்விதமாக ஏமாற்றும் நிகழ்ச்சிகள் தினமும் நடக்கின்றன. இதுமாதிரியான ஒரு மோசடிக் கும்பலிடம் சிக்கி, தப்பித்து வந்திருக்கிறார் சூரியகுமார். இந்த மோசடி கும்பலிடம் சிக்கிய சம்பவத்தை நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
வேலைவாய்ப்பு விளம்பரங்கள்!
“படித்து முடித்துவிட்டு, வேலை கிடைக்காத காரணத்தினால் நம்பிக்கை இழந்திருந்த எனக்கு, கடந்த அக்டோபர் மாதத்தில் வேலைவாய்ப்புக் கான அந்த விளம்பரம் என் கண்ணில்பட்டது. நம்பகத்தன்மையான வேலைவாய்ப்பு வலைதளத்தில் விளம்பரம் வந்திருந்ததால், அதில் குறிப்பிட்டிருந்த நபரைத் தொடர்பு கொண்டேன். அவர் ஒரு பிரபல தொழிற்சாலையில் மனிதவள மேலாளர் என்று தன்னை சொல்லிக் கொண்டார். எனக்கு வேலை கிடைக்க உதவுவதாகவும், வேலை கிடைத்தப்பின் நான் அவருக்கு 2 லட்சம் ருபாய்த் தரும்படியும் கேட்டார். கடந்த ஆறு மாதங்களாக வேலை தேடி மிகவும் அவதிப் பட்டதால், பணம் கொடுத்து வேலை வாங்குவதில் விருப்பம் இல்லாதபோதும் வேறு வழி இல்லாததால் ஒப்புக்கொண்டேன்.
இரண்டு லட்சம் பணம்!
அவர் சொன்ன பெயரில் நிஜமாகவே ஒரு பெரிய நிறுவனம் இருந்தது. அந்த நிறுவனத்தின் மின்னஞ்சல் போலவே, ஒரு மின்னஞ்சலில் இருந்து என்னைத் தொடர்புகொண்டனர். தொலைபேசி மூலம் இன்டர்வியூ நடத்தப்பட்டது. அந்த இன்டர்வியூவிலேயே துறை சார்ந்த கேள்விகளை கேட்டு என்னைத் திக்குமுக்காட வைத்தார்கள்.
சில நாள் கழித்து, நான் அந்த இன்டர்வியூவில் தேர்ச்சியும் பெற்றதாகச் சொன்னார்கள். ஆனால், நேரில் பார்க்காமல் வேலைக்கான அப்பாயின் மென்ட் ஆர்டரை தரமுடியாது என்பதால் என்னை டெல்லிக்கு அழைத்தனர். டெல்லியில் அப்பாயின்மென்ட் ஆர்டர் வாங்கியவுடன் பேசியபடி பணத்தைத் தரவேண்டும் என்று கேட்டனர்.
கடைசி நேரத்தில்..!
டெல்லியில் அந்த நிறுவனத்தின் வாசலில் ஒரு பெண் என்னைச் சந்தித்தார். நிறுவனத்துக்குள் என்னை வரச் சொல்லாமல், வெளியில் சந்தித்ததால் எனக்குச் சந்தேகம் வந்தது. அவரைச் சந்தித்த சிறிது நேரத்தில் அவர்கள் வழங்குவதாகச் சொல்லியிருந்த அப்பாயின்மென்ட் ஆர்டர் என் மின்னஞ்சலுக்கு வந்தது. பேசியபடி பணத்தைத் தர டெல்லியிலுள்ள ஒரு இடத்துக்கு வரும்படி அழைத்தனர். என் சந்தேகம் வலுவடைந்ததால், முதல் வேலையாக செல்போனை அணைத்து விட்டு சென்னைக்குத் திரும்பிவிட்டேன்.
சிக்கியவர்கள் பலர்!
ஒரு மாதத்துக்குப் பிறகு ஃபேஸ்புக் மூலம் கிடைத்த தகவலின்படி, அந்த மோசடிக் கும்பல் 12 பட்டதாரிகளை ஏமாற்றியுள்ளதாகச் செய்தி கிடைத்தது. டெல்லியில் என்னைச் சந்தித்த பெண்ணின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, அந்த மோசடிக் கும்பலைப் பற்றி எழுதியிருந்தேன். அதைப் பார்த்த ஒரு நண்பர் சமீபத்தில் என்னைத் தொடர்புகொண்டார். அவரும், அவரது நண்பர்கள் ஐந்து பேரும் அதே மோசடிக் கும்பலிடம் வேறு ஒரு நிறுவனத்தின் பெயரில் ரூ.12.5 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார்கள். அதே மோசடிக் கும்பல் தொடர்ந்து இதேபோன்ற நூதன மோசடி வேலைகளில் ஈடுபட்டு வேலை தேடும் பட்டதாரி களின் வாழ்கையில் விளையாடி வருகின்றனர். வேலை தேடும் பட்டதாரி இளைஞர்கள், இதுமாதிரியான மோசடிக் கும்பலிடம் சிக்காமல் உஷாராக இருக்க வேண்டும். இந்த மாதிரியான மோசடிக் கும்பலிடம் இருந்து பட்டதாரிகளைக் காக்க அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிற கோரிக்கையுடன் முடித்தார் சூரியகுமார்.
இளைஞர்கள் கவனிக்க!
இதுபோன்ற நூதனமான வேலை மோசடியில் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று சென்னையிலுள்ள மனிதவள மறுமலர்ச்சி மையத்தின் இயக்குநர் மற்றும் மனிதவள ஆலோசகர் கே.ஜாபர் அலியிடம் பேசினோம்.
“ஒரு இளைஞன் பணம் கொடுத்து வேலை வாங்க முடிவெடுத்துவிட்டால், அவன் ஏமாறத் தயாராகிவிட்டான் என்று அர்த்தம். தனது திறமையை, அறிவைக் கொண்டுதான் வேலையைத் தனதாக்க வேண்டுமே தவிர, எந்தவொரு சூழ்நிலையிலும் இதுபோன்ற காரியங்களில் இளைஞர்கள் இறங்கவே கூடாது.
இன்றைய இளைஞர்கள் பலவிதமான நூதன வேலை மோசடிகளைக் கவனிக்க வேண்டும்.
ஏமாற்றும் விதம்!
1. இல்லாத நிறுவனம், அங்கு வேலை செய்யாதவர்கள், அந்த நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி.
2. இருக்கும் நிறுவனம், அங்கு வேலை செய்பவர்கள், இல்லாத வேலையை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி.
3. இருக்கும் நிறுவனம், அங்கு வேலை செய்பவர்கள் இருக்கும் வேலையை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி. ஆனால், இவர்கள் பலே கில்லாடிகளாக இருப்பார்கள். அவர்கள் சொன்னபடி வேலையையும் வாங்கித் தருவார்கள். ஆனால், அந்த வேலையானது ஓரிரு மாதங்கள்கூட இருக்காது அல்லது அங்கு ஓரிரு மாதங்கள்கூட ஒருவரால் தாக்கு பிடிக்க முடியாது.
4. பணம் வாங்கிப் பயிற்சி தந்துவிட்டு, அதன்பிறகு வேலை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி.
5. புதிய நிறுவனங்களை ஆரம்பிப்பவர் கள் வேலை கொடுப்பதாகத் தரும் வாக்குறுதி. இவர்கள், “நாங்கள் புதிதாக நிறுவனம் ஆரம்பித்திருக்கிறோம். எங்களால் குறிப்பிட்ட தொகையை மட்டுமே முதலீடு செய்ய முடிந்தது. மீதித் தொகையை இந்த நிறுவனத்தில் வேலை செய்யத் தயாராக இருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளலாம். நிச்சயமாக வேலை நிரந்தரமாகும்” என்பார்கள். இவர்களின் ஒரேநோக்கம் பணமாக மட்டுமே இருக்கும்.
முதலில், எந்தவொரு நிறுவனமும் ஆட்களை நேரில் பார்க்காமல் தொலைபேசி இன்டர்வியூ எடுத்து பணியாளர்களைத் தேர்வு செய்ய மாட்டார்கள். அதுபோல, வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்கிறவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் மையம் அமைத்து அங்குதான் தேர்வு செய்வார் களே தவிர, பொது இடங்களுக்கு மாணவர்களை வரவைத்து இன்டர்வியூ நடத்த மாட்டார்கள். இதை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் மற்றும் எம்பிஏ முடிக்கும் மாணவர்களில் 15% பேர் மட்டுமே உடனடியாக வேலை செய்வதற்குத் தகுதியானவர் களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கல்லூரிக்குள் நடத்தும் கேம்பஸ் இன்டர்வியூக்களில் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். மீதி இருக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்குத்தான் ஏமாற்று நிறுவனங்கள் வலைவிரிக்கின்றன.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் வேலை!
வேலைக்காகப் பணத்தைக் கொடுத்து ஏமாற்றத்தைச் சந்திப்பவர்களில் பெரும்பாலும் சமூகத்தினால் உண்டாகும் மன அழுத்தத்தால், ஏதேனும் ஒருவேலை கிடைத்தால் போதும் என்று நினைத்து, சிக்கலில் சிக்கிக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். இன்றைய இளைஞர்கள் செய்யும் பெரிய தவறு, பணம் கொடுத்தாவது பெரிய நிறுவனத்தில் அதிகச் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும் என்று முனைவதுதான். இன்றைய நிலையில் தரமான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இவர்களுக்குப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதுபோன்ற நிறுவனங்கள் தன்னைத் தேடிவரும் திறமையாளனை தவறவிடுவதே கிடையாது. அதே சமயம், தானாகத் தேடிப் போய்த் திறமையாளர் களை அழைத்து வருவதும் கிடையாது. அதனால், அதிக சம்பளம், பிரபலமான நிறுவனம் என்று மட்டும் வேலை தேடாமல் ஆரம்பத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் சேர்ந்து அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு சில ஆண்டு களுக்குப் பிறகு அதிக சம்பளத்துக்காக வேலையை மாற்றிக்கொள்வதே புத்திசாலித்தனம்.
இதை விடுத்து பணத்தைக் கொடுத்து வேலைக்குச் சேர முயற்சித்தால், வேலையில்லா பட்டதாரியாகவே நிற்கவேண்டும். தவிர, பணத்தைத் தந்து வேலை வாங்கும் பணியாளரிடம் சுயமதிப்பு என்பதும், தன்னம்பிக்கை என்பதும் இல்லாமல் போய்விடும். இந்த நிலையானது தொடரும்பட்சத்தில் வேலையிலாகட்டும், பொது வாழ்க்கையில் ஆகட்டும், வெற்றியைத் தனதாக்கிக் கொள்ளவே முடியாது” என்றார்.
மோசடி நிறுவனங்கள் தீவிரமாக வலைவிரித்து அலையும் இந்தக் காலத்தில் எச்சரிக்கை அவசியம் இளைஞர்களே!
விசாரித்த பிறகு களமிறங்குங்கள்!
வேலை வாங்கித் தருவதாக சொல்லும் மோசடி நிறுவனங்கள் பற்றி சைபர் கிரைம் வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘இன்றைய நிலையில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களைக் குறிவைத்து பெரும்பாலான ஏமாற்று நிறுவனங்கள் முளைத்து வருகின்றன.
இதைக் களைவதற்கான நடவடிக்கைகளை சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து எடுத்துவருகிறது. இதுமாதிரியான மோசடி நிறுவனங்களிடம் சிக்காமல், இன்றைய இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேலை கிடைக்கவில்லை என்பதற்காக பணம் கொடுத்து வேலைக்குச் செல்லலாம் என்கிற மனநிலைக்கு வரவேண்டாம்.
இன்றைய நிலையில் பேருந்துகள், ரயில் வண்டிகள் எனப் பல இடங்களில் வேலைக்கான விளம்பரங்களைப் பார்க்கிறோம். இதைப் பார்த்ததும் நாம் நம்பிவிடுகிறோமா என்ன? அதுபோல, நம்பகத்தன்மையான வலைதளங்கள், நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் வேலைக்கான விளம்பரங்களைப் பார்த்தாலும் அதுகுறித்து முழுமையாக விசாரித்து, அதில் உண்மைத்தன்மை இருக்கும்போது அதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. வேலைகான வாய்ப்புகளை அந்தந்த நிறுவனங்களின் வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்களா என்பதையும் பார்ப்பது அவசியமாகும். மேலும், வேலை மோசடி குறித்த புகார்களுக்கு சென்னை எழும்பூரிலுள்ள மத்திய க்ரைம் குற்றப்பிரிவு கிளையை அணுகலாம்” என்றனர்.
செ.கார்த்திகேயன்
விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.
No comments:
Post a Comment