Blogger Widgets

Total Page visits

Thursday, July 10, 2014

முன்னுதாரணமான முடிவு!

இன்று நாடு தழுவிய அளவில் எல்லா அலுவலகங்களும் எதிர்கொள்ளும் மிகப்பெரும் பிரச்னை- பணிக்கு மது அருந்தி விட்டு வரும் ஊழியர்கள். இதை எவ்வாறு தடுப்பது, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று பலரும் தயங்கிக்கொண்டிருக்கும் வேளையில் ரயில்வே நிர்வாகம் துணிந்து புதிய கொள்கை முடிவு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அதிகாரிகள் மற்றும் ரயில்வே சார்ந்த அமைப்புகளின் கருத்துக்கேட்புக்காக அனுப்பப்பட்டுள்ள இந்த கொள்கை முடிவின்படி, பணிக்கு வரும்போது ரயில்வே ஊழியர் அனைவரும் வாய்ஊது சோதனைக்கு (பிரீத் அனலைசர்) உட்பட்டாக வேண்டும்.
ரயில்ஓட்டுநர், ரயில்நிலைய அதிகாரி, சமிக்ஞைகள் மாற்றும் ஊழியர் போன்ற முக்கியமான, விபத்தில்லா சேவைக்கு அடிப்படையான ஊழியர்கள் இந்த சோதனைக்கு கட்டாயமாக உட்பட்டாக வேண்டும். இவர்களைத் தவிர, பாதுகாப்பான பயணத்துடன் தொடர்பு இல்லாத டிக்கெட் பரிசோதகர் போன்ற பணியாளர்களும், ரயில்வேயின் "மரியாதை மற்றும் கெளரவம் காக்க' இந்தச் சோதனைக்கு ஆட்பட்டாக வேண்டும் என்கிறது அக் கொள்கை முடிவு.
பாதுகாப்பான பயணத்துடன் தொடர்புடைய ரயில்வே ஊழியர், சமிக்ஞை தரும் ஊழியர் போன்றோர் ரத்தத்தில் 100 மில்லி லிட்டருக்கு 10 மில்லிகிராம் மது இருக்குமேயானால் அவர் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டார். இந்த அளவு 21 மில்லிகிராமுக்கு அதிகமாக இருப்பின் அவர் பணிநீக்கம் செய்யப்படுவார் என்கிறது புதிய கொள்கை முடிவு.
இரண்டாவது முடிவுக்கு தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொள்ளாது என்பதை இப்போதே சொல்லிவிடலாம். அவரை பணியிடை நீக்கம், அல்லது விடுப்பில் செல்லுமாறு சொல்வதே சரி என்று எதிர்ப்பு தெரிவிப்பார்கள். தொழிற்சங்கங்களுக்குப் பொதுமக்களின் பாதுகாப்பை விட அவர்களுக்கு சந்தா வழங்கும் ஊழியர்களின் நலன்தான் முக்கியம். தொழிற்சங்கங்கள் எதிர்த்தாலும் நிச்சயமாக, வாய்ஊது சோதனை என்பது ரயில்வே துறையில் அறிமுகம் செய்யப்பட்டாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
ஒரு ரயில் பெட்டியிலோ அல்லது பேருந்திலோ ஒரு குடிகாரர் சக பயணிகளுக்கு தொல்லையாக மாறுகிறார் எனும்போது, அவரை இறக்கிவிட டிக்கெட் பரிசோதகர், பேருந்து நடத்துநர் ஆகியோருக்கு அதிகாரம் உள்ளது. பயணிகளுக்கு ஒரு நியாயம், பயணிகளின் உயிருக்கு பொறுப்பேற்று பணியாற்ற வேண்டியவர்களுக்கு ஒரு நியாயமா? மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டியவர்கள் மது அருந்தினால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதுதானே முறை?
அண்மையில், மும்பை அருகே ஓடும் ரயிலிலிருந்து டிக்கெட் பரிசோதகரால் தள்ளிவிடப்பட்டதில் ஒரு பெண்மணி கீழே விழுந்து இறந்தார். இந்த சம்பவத்தின்போது அந்த டிக்கெட் பரிசோதகர் மதுபோதையில் இருந்தார் என்கின்றன செய்திகள்.
சென்ற ஆண்டு பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் விருத்தாசலம் ரயில் தண்டவாளத்தில் சிதறிக்கிடந்தன.
இதற்கு, பணியாற்றிய ஊழியர்கள் போதையில் அந்த விடைத்தாள் கட்டுகளை கையாண்ட விதம்தான் காரணம்.
இந்திய ரயில்வே துறையில் விபத்துக் காலத்தில், தொடர்புடைய என்ஜின் டிரைவரை மட்டுமே ரத்தத்தில் மதுஅளவுச் சோதனைக்கு உட்படுத்தும் நிலைமை இருந்து வருகிறது. விபத்து நடந்தபிறகு இச்சோதனையால் என்ன பயன்? முதலிலேயே நடத்துவது என்கிற முடிவுக்கு ரயில்வே வந்திருப்பது பாராட்டுக்குரியது.
முதல் கட்டமாக, ரயில்வேயில் மட்டுமல்லாமல் பொதுமக்களின் பாதுகாப்பு சார்ந்த அனைத்துத் துறைகளிலும் இத்தகைய மதுஅளவுச் சோதனை கட்டாயமாக்கப்பட வேண்டும். போக்குவரத்துத் துறையில் இது மிகமிக அவசியமானது.
சாலை விபத்துகளில் 99 விழுக்காடு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாலும் செல்போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டுவதாலும்தான் ஏற்படுகின்றன. விபத்து நடந்த பிறகு, ஓட்டுநர் மது அருந்தியிருக்கவில்லை என்று பொய்ச்சான்று காப்பீடு காரணங்களுக்காக பல ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து பெறப்படுகிறது. ஆகையால், பெரும்பாலான விபத்துகளில் மது அருந்தியிருந்தார் என்கிற பதிவு இல்லாமலே போகிறது.
அரசே மதுபான விற்பனையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசின் கடமை. ரயில்வே எடுக்க இருக்கும் இந்த நல்ல முடிவு, மக்களின் பாதுகாப்புடன் தொடர்புடைய காவல்துறை உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இந்த முடிவுகளில் கடுமையான தண்டனை இருப்பதை தொழிலாளர்கள் நலன் என்ற பெயரில் யாரும் தடை செய்ய முற்படுதல் கூடாது. இந்த முடிவை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வெகு ஜன விரோதிகள்.

நன்றி தினமணி 

No comments: