ஒவ்வொரு ஆண்டும் படித்து வெளிவரும் 6 லட்சம் பொறியியல் பட்டதாரிகளில், 20% அளவிற்கும் குறைவானவர்களே, மென்பொருள் பணிக்கு தகுதி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
பொறியியல் பட்டதாரிகளுக்கான Aspiring Minds என்ற தேசிய வேலை வாய்ப்பு அறிக்கை இந்த தகவலை தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: படித்து வெளிவரும் பொறியியல் பட்டதாரிகளில், வெறும் 18.43% பேர் மட்டுமே, மென்பொருள்(software) துறையில் பணி வாய்ப்புகளை பெறுகிறார்களாம்.
இந்தியாவெங்கும் பரந்து விரிந்துள்ள பொறியியல் கல்லூரிகளில், தேர்வு செய்யப்பட்ட 520க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படித்து முடித்த 1.20 லட்சம் பொறியியல் பட்டதாரிகளிடம் ஆய்வுசெய்யப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கடந்த 2013ம் ஆண்டில் தங்களின் படிப்பை நிறைவு செய்தவர்கள்.
இந்த 1.20 லட்சம் பேரில், 91.82% பேருக்கு, புரோகிராமிங் மற்றும் அல்கோரிதம் திறமைகள் குறைவாகவும், 71.23% பேருக்கு, மென்திறன்கள் மற்றும் அறிவுத்திறன்கள் குறைவாகவும், 60% பேருக்கு துறைசார்ந்த அறிவு குறைவாகவும், 73.63% பேருக்கு ஆங்கிலம் பேசும் திறன் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் குறைவாகவும், 57.96% பேருக்கு பகுப்பாய்வு மற்றும் மதிப்பிடும் திறன்கள் குறைவாகவும் இருப்பதாக அந்த ஆய்வு விரிவாக தெரிவிக்கிறது.
பொறியியல் மாணவர்களுக்கான குறைந்த பணி வாய்ப்புகள் எனும் நிலை, நாட்டின் மோசமான கல்வித் தரத்தையும், பணி வழங்கும் நிறுவனங்களுக்கு உயர்திறன் கொண்ட பணியாளர்கள் தேவைப்படுவதையும் குறிக்கிறது. இதனால், நாட்டில் மிகப்பெரிய திறன் இடைவெளி ஏற்படுகிறது.
கார்பரேட் நிறுவனங்கள், ஒரு பட்டதாரியை பணியமர்த்தும்போது, அவர் தேவையான அடிப்படைத் திறன்களைப் பெற்றிருக்கிறாரா என்பதைத்தான் பார்க்கின்றன. பணியில் சேர்த்த பின்னர், அவருக்கு பெரியளவில் பயிற்சிக் கொடுக்க அவை விரும்புவதில்லை. எனவே, தேவைப்படக்கூடிய அடிப்படைத் திறன்களைக்கூட பெற்றிராத பட்டதாரிகள், ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்படுகிறார்கள்.
இந்த அறிக்கையில் இன்னொரு முக்கிய அம்சமும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனங்கள், தங்களுக்கான ஊழியர்களை தேர்வுசெய்கையில், எது புகழ்வாய்ந்த கல்லூரி அல்லது கல்வி நிறுவனம் என்பதைப் பார்த்து, அந்தக் கல்லூரிகள் அல்லது கல்வி நிறுவனத்தை மட்டுமே நாடிச் செல்கின்றன.
இதனால், அந்தளவுக்கு பெயர் பெற்றிராத, பல சாதாரண கல்வி நிறுவனங்களில் படிக்கும் பல திறமையான மாணவர்களை அந்த நிறுவனங்கள் இழந்து விடுகின்றன. இது நமது சமூகத்தின் ஒரு போக்காக உள்ளது. இதன்மூலம், சுமார் 70% மனித ஆற்றல் இழக்கப்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
Resume Shortlist செய்யப்படும்போதே, ஒரு விண்ணப்பதாரர் படித்த கல்வி நிறுவனத்தின் brand -க்குதான் முக்கியத்துவம் தரப்படுகிறது. அந்தளவுக்கு பெயர் தெரியாத கல்லூரியில் படித்த ஒரு பட்டதாரியின் விண்ணப்பம், அடிப்படை நிலையிலேயே நிராகரிக்கப்பட்டு விடுகிறது.
இதன்மூலம், ஒரு பிரபலமடையாத கல்லூரியில் படித்த ஒரு மாணவர், தனது பணிக்குத் தேவையான அடிப்படைத் திறன்கள், துறை அறிவு மற்றும் மொழியறிவு ஆகியவற்றை சரியான அளவில் பெற்றிருந்தாலும்கூட, அவர் தனக்கான முக்கியத்துவத்தை இழக்கிறார்.
அவரால், விரும்பிய நிறுவனத்தில் பணியைப் பெற முடிவதில்லை. அப்படியே, அவருக்கு பணி வாய்ப்பு சில நிறுவனங்களில் கிடைத்தாலும், அவர் பெறும் சம்பளம், பெயர்பெற்ற கல்லூரியில் படித்த பட்டதாரிகள் பெறும் சம்பளத்தைவிட குறைவாகவே அமைகிறது. இதுதான் உண்மை நிலை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தினமலர்
No comments:
Post a Comment