Blogger Widgets

Total Page visits

Friday, June 20, 2014

பாதுகாப்போம் பள்ளிக் குழந்தைகளை

இன்றைய குழந்தைகள், வருங்கால இந்தியாவின் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பொறுப்புள்ள குடிமக்கள். அதனால்தான் குழந்தைகளின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சி விஷயத்தில் அரசு அதிக அக்கறை காட்டிவருகிறது. அதே நேரத்தில் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை எதிர்கால மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ, விஞ்ஞானிகளாகவோ உருவாக்கவேண்டும் என்ற கனவுகளில்தான் பள்ளிக்கு அனுப்புகின்றனர்.

ஆனால் பள்ளிக்கு அனுப்பிய குழந்தை பாதுகாப்பாக மீண்டும் வீட்டுக்கு வருமா என்பது இன்றைய காலகட்டத்தில் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. சமீபகாலமாக பள்ளிக் குழந்தைகள், பள்ளிக்குச் சென்று வரும்போது விபத்துகளில் சிக்கி பலியாவது அடிக்கடி நிகழ்கிறது.

இதில் மிகவும் வருந்ததக்க விஷயம் என்னவென்றால் இந்த விபத்துகளில் பள்ளிக் குழந்தைகள் பலியாவதற்கு, வாகன ஓட்டுநரோ அல்லது யாரோ ஒருவரின் கவனக்குறைவு காரணமாயிருக்கிறது.

பள்ளி மற்றும் தனியார் வாகனங்களில் புளிமூட்டைகளைப் போல பள்ளிக் குழந்தைகளை அடைத்துக்கொண்டு அசுரவேகத்தில் செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்களை தினசரி நாம் காணலாம். அரசு என்னதான் சட்டங்களைக் கடுமையாக்கினாலும், அதிகாரிகள் ஆங்காங்கே வாகனத் தணிக்கை நடத்தினாலும் இதுபோன்ற விதிமீறல்களை முற்றிலுமாகக் குறைக்க முடிவதில்லை.

தினசரி ஒரே பாதையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநருக்கு நன்றாகத் தெரியும் எங்கெங்கே போலீஸார் மற்றும் போக்குவரத்துத் துறையினர் தணிக்கையில் ஈடுபடுவார்கள் என்று. அக்குறிப்பிட்ட பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் வரும்போது கைப்பேசியை பயன்படுத்திக்கொண்டும், அதிவேகமாகவும்தான் வாகனங்களை இயக்குகின்றனர்.

முதன்முறையாக சென்னையில் பள்ளி மாணவி ஒருவர், பள்ளி பஸ்ஸின் உள்பகுதியில் இருந்த ஓட்டை வழியே கீழே விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தபோதுதான் அரசாங்கம் விழிப்படைந்து பல்வேறு புதிய விதிமுறைகளையும், சட்ட திட்டங்களையும் பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு விதித்தது.

ஆனால், இவை எந்தளவுக்கு கடைபிடிக்கப்படுகின்றன என்பது சர்ச்சைக்குரிய விஷயமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு கல்வியாண்டின் துவக்கத்திலுமோ அல்லது எப்போதாவது விபத்துகள் நிகழும்போதோ மட்டும்தான், சட்டம் தன் கடமையைச் செய்கிறது. மற்ற நேரங்களில் யாரும், எதையும் கண்டுகொள்வதில்லை.

அதையும் மீறி, விதிமீறல் என வாகனங்களைப் பிடித்தால், அவர்கள் தங்கள் சங்கங்கள் மூலமாக வேலைநிறுத்தம், பேரணி, போராட்டம் என பிரச்னையில் ஈடுபடுகின்றனர். பள்ளி வாகனங்களை முறையாகப் பராமரிக்கவில்லை என பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்தாலும் இதே பிரச்னைகள்தான் உண்டாகின்றன. ஆனால் சாலை விதி மீறல், அசுரவேகம், கவனக்குறைவு என ஓட்டுநர்கள் செய்யும் தவறுகளுக்கு அநியாயமாக சாலையில் விழுந்து பழியாவது யாரோ பெற்ற அப்பாவி பச்சிளம் குழந்தைகள்தான்.

இப்பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தாங்களே, தங்கள் சொந்த வாகனங்களில் பள்ளிக்கு அழைத்துச் செல்வதுதான். பெரும்பாலான பெற்றோர் 9 மணி பள்ளிக்கு, பிள்ளைகளை ஆட்டோவிலோ, வேறு வாகனங்களிலோ 8.30 மணிக்கு அனுப்பிவிட்டு, பிறகு 10 மணி வேலைக்கு, இவர்கள் 9.30 மணிக்கு மேல் அரக்கப்பரக்க புறப்பட்டுச் செல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இத்தகைய அவசரம்தான் பல்வேறு விபத்துகளுக்கு காரணமாகிறது. குழந்தைகளோடு சேர்ந்து அரை மணி நேரம் முன்கூட்டியே கிளம்பி, அவர்களையும் பள்ளியில் பாதுகாப்பாகச் சேர்த்துவிட்டு, தானும் வேலைக்கு நிதானமாக செல்லலாம் என்ற மனப்பக்குவத்துக்கு பெற்றோர்கள் வரவேண்டும்.

மேலும், போக்குவரத்து அதிகாரிகளும் வாரம் ஓரிரு முறை சாதாரண உடையில் மாவட்டம் அல்லது நகரம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு, விதிமீறல் வாகனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். வாகனங்கள் பாதுகாப்பான, விரைவான பயணத்துக்குத்தானே தவிர, பந்தயத்துக்கோ அல்லது மற்றவரின் உயிரை எடுப்பதற்கோ அல்ல என்பதை ஓட்டுநர்களுக்கு விளக்கவேண்டும்.

உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகன ஓட்டுநரின் உரிமம் நிரந்தரமாக பறிக்கப்படுவதுடன், வாகனமும் சாலையில் இயக்கத் தகுதியற்றது எனச் சான்று வழங்கினால் விபத்துகள் குறைய வாய்ப்புள்ளது.

மேலும், அரசு மற்றும் தனியார் பேருந்து, பள்ளி, கல்லூரி வாகனங்கள் என அனைத்துக்குமே வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைக் கட்டாயமாக்கினால் விபத்துகள் குறைவதற்கு வாய்ப்புண்டு. சட்டங்கள் கடுமையானால்தான் விபத்துகள் குறையும்.

Thanks dinamani 

No comments: