Blogger Widgets

Total Page visits

Friday, June 20, 2014

திருநங்கைகள் செய்த பாவமென்ன?

அரசுப் பணியிலோ அல்லது தனியார் நிறுவனப் பணியிலோ முக்கியப் பணியிடத்தில் சேருவதற்கான தகுதி அனைத்தையும் கொண்டிருக்கிறேன். ஆனால், நான் ஒரு திருநங்கை என்பதால், சக பணியாளர்களின் கேலிப் பேச்சுக்கு ஆளானேன். எனது பணியில் அதிக அளவில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு சமயத்தில் பணியிலிருந்தும் வெளியேற்றப்பட்டேன்'

"நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தேன். நான் திருநங்கை என்பதால், எனது குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டேன். நான் பிறந்த ஊரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் வசிக்கிறேன். தினமும் நான் பிறந்த ஊர் வழியாகச் செல்கிறேன். எனது சகோதரி என்னைப் பார்த்தாலும் சைகையினாலேயே பேசுகிறார். இது மன வலியை ஏற்படுத்துகிறது?

"நான் நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறேன். அங்கு நடனம் கற்பது தொடர்பாக விசாரணைக்கு வருவர். நான் திருநங்கை என்று தெரிந்ததும், பேச்சை மாற்றி அங்கிருந்து சென்று விடுகின்றனர். வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும்போது, பாழாய்ப்போன சமூகம் விடமாட்டேன் என்கிறது'
- இவையெல்லாம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் திருநங்கைகள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சியில் தங்களது உள்ளக்கிடக்கையை உணர்ச்சிப்பூர்வமாகவும், இந்த சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட ஜென்மமாக உள்ளோமே என்ற வேதனையுடனும் தெரிவிக்கப்பட்டவை.

அவற்றை அழுகையுடனும் ஆக்ரோஷமாகவும், ஆணித்தரமாகவும் அவர்கள் வெளிப்படுத்தினர். அவர்களின் ஒட்டுமொத்தக் கேள்வி நாங்கள் புறக்கணிக்கப்பட்டவர்களா? என்பதே.

தமிழ்நாட்டில் அரவாணிகள் என்றழைக்கப்படும் திருநங்கைகள் சுமார் 3,000 பேர் வசிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் என்ற இடத்தில் ஆண்டுக்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் கூடி, திருவிழா நடத்துகின்றனர்.

இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகளும் கலந்து கொள்கின்றனர். இதில் சந்தோஷம், துக்கம் என அனைத்தும் கலந்திருக்கும்.

ஆண், பெண் என இரு பாலினங்கள் உள்ளதுபோல, ஆணாகப் பிறந்து பெண்ணின் தன்மைகளைப் பெறும் திருநங்கைகளை மூன்றாவது பாலினம் என தமிழக அரசு அடையாளம் காட்டியுள்ளது.

இவர்களுக்கு சமூகநலத் துறையில் தனிப் பிரிவே துவக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை வழங்க வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எழுதி அதில் திருநங்கைகள் வேலைவாய்ப்பையும் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மதுரை மக்களவைத் தொகுதியில் ஒரு திருநங்கை சுயேச்சையாகப் போட்டியிட்டார். தேவாலயத்தின் பாதிரியாராகவும் திருநங்கை நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்படி வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இந்த மூன்றாம் பாலினத்தினரை முன்னேற விடாமல், பலரும் தடுக்கின்றனர் என்பது இவர்களது குற்றச்சாட்டு. "எங்களை இந்த சமுதாயம் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறது. நாங்கள் மூன்றாவது பாலினமாகப் பிறந்தது எங்களது குற்றமா?

ஊனமுற்ற குழந்தையையோ, மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையையோ பெற்றோரும், உடன் பிறந்தோரும் புறக்கணிக்கின்றனரா? எங்களை மட்டும் புறக்கணிப்பது ஏன்? இதனால் நாங்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறோம்.

பாலியல் தொழிலும், பிச்சை எடுத்தலும் என்ன எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட தொழிலா? முந்தைய காலத்தில் கல்வியறிவு பெறாமல் இதுபோன்ற புதைகுழியில் தள்ளப்பட்டிருக்கலாம்.

ஆனால், இப்போது ஒவ்வொரு திருநங்கையும் அவர்களால் இயன்ற அளவில் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கின்றனர். ஆனால், இந்த சமுதாயம் முன்னேற விடாமல் தடுக்கிறது. பல்வேறு துறைகளில் பலரும் பிரகாசித்து வரத் துவங்கியுள்ளனர்.

எங்களது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற பல்வேறு அமைப்புகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. பலரும் எழுதி வருகின்றனர். இருந்தும், எங்களை இந்தப் புதை குழியில் தள்ளியதே இந்தச் சமுதாயம்தான்.

"ஒரு வீட்டில் ஒரு சிறுவன் காணாமல் போனால், நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கின்றனர். காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். திருநங்கையாகிய எங்களைக் காணவில்லை, கண்டுபிடித்துத் தாருங்கள் என்று எந்தப் பெற்றோராவது காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்களா? நாங்கள் என்ன பாவம்  செய்தோம்?

முதலில் எங்களது பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் எங்களை ஏற்றுக் கொள்ளட்டும். அதன் பிறகு சமுதாயத்தில் ஏற்படும் மாற்றத்தைப் பாருங்கள்' என்றும் கூறுகின்றனர் திருநங்கைகள்.

நியாயம்தானே?

Thanks Dinamani

No comments: