Blogger Widgets

Total Page visits

Thursday, June 26, 2014

பொறியியல் கவுன்சிலிங் வழிகாட்டி.... படித்துவிட்டு பகிருங்கள் :

பொறியியல் கவுன்சிலிங் வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வாழ்த்துகள் . மிக மிக எளிமையாக பொறியியல் கவுன்சிலிங்கில் கல்லூரிகளை தேர்வு செய்ய முடியும். உங்களுக்கு வந்திருக்கும் பொறியியல் கவுன்சிலிங் அழைப்பு கடிதத்தின் நகலை எடுத்துக்கொண்டு வந்தால் பயணம் செய்யும் சென்னை மாநகராட்சி பேருந்தில் கட்டணச்சலுகை உண்டு. ஆகவே, முன்னமே அழைப்பு கடிதத்தின் நகலை எடுத்து வாருங்கள்.
இச்சலுகையைப் பெற கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அழைக்கும் கடிதத்தைப் பேருந்து நடத்துனரிடம் காண்பிக்க வேண்டும். தவறாமல், அழைப்புக் கடிதத்தின் நகல்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

Counseling Tips :
மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல்களை கொண்டு வாருங்கள்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள், கவுன்சிலிங் நடப்பதற்கு இரண்டு மணிநேரம் முன்னமே வந்துவிடுங்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்ததும் அங்கிருக்கும் வங்கி கவுண்டர்களில் உங்களின் அழைப்புக் கடிதத்தை காட்டி, ரூ.5 ஆயிரம் கட்ட வேண்டும். நீங்கள் எஸ்.சி. அல்லது எஸ்.டி. மாணவராக இருந்தால், ரூ.1000 கட்டினால் போதுமானது. இதைக்கட்டியதும் ஒரு ரசீதை எண்ணோடு தருவார்கள்.
நீங்கள் அங்கிருக்கும் டிஸ்ப்ளே அரங்கில் ஒவ்வொரு கல்லூரியில் உள்ள காலி இடங்கள் தொடர்ந்து பெரிய திரைகளில் வந்து கொண்டிருக்கும். அதைப் பார்த்து, அதற்கேற்ப கல்லூரிகளை தெரிவு செய்து கொள்ளலாம்.
முன்னதாகவே, குறைந்தபட்சம் மூன்று கல்லூரிகளை, அதுவும் அவற்றுக்கான எண்ணோடு (விண்ணப்பம் பெற்றபொழுது கொடுக்கப்பட்ட புத்தகத்தில் அந்த எண் இருக்கும்) குறித்துக்கொண்டு வாருங்கள்.
உங்களுக்கான கவுன்சிலிங் நேரத்துக்கு முன்னமே நீங்கள் வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தப்படுவீர்கள். மாணவர் உடன் ஒரே ஒரு நபர் (பெற்றோர் அல்லது காப்பாளர்) மட்டுமே கூட செல்ல இயலும்.
உள்ளே சென்றதும் கொஞ்ச நேரம் காத்திருப்பீர்கள். உங்களிடம் ஒரு சிறிய படிவம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் பெயர், விண்ணப்ப எண் முதலிய விவரங்களைப் பூர்த்தி செய்து வைத்திருங்கள். மூன்று கல்லூரிகளும் கேட்கப்பட்டு இருக்கும். அதை கவுன்சிலிங் அறைக்குள் போனபிறகு பூர்த்தி செய்து கொள்ளலாம்.
உங்களை உள்ளே அழைத்ததும் கவுன்சிலிங் அறைக்குள் செல்லலாம். முதலில் சான்றிதழ்களை சரிபார்ப்பார்கள். ஒரிஜினல்களை காட்ட வேண்டும்; சரிப்பார்த்து முடிந்ததும் ஒரிஜினல்களை கட்டாயம் வாங்கிக்கொள்ளுங்கள்.
அதற்குப் பிறகு கணினி முன் போய் உட்காருவீர்கள். துறை அல்லது கல்லூரி சொன்னால் அதில் காலியாக உள்ள இடங்களை சொல்வார்கள். இப்படி மூன்று சாய்ஸ்களை நீங்கள் தரவேண்டும். (கல்லூரி பெயரில் கவனமாக இருங்கள். ஒரே பெயரில் எண்ணற்ற கல்லூரிகள் இருக்கின்றன. கல்லூரி குறியீட்டு எண் இங்குதான் பயன்படும்).
நீங்கள் கேட்ட துறை இருக்கிறது என்றால் பச்சை விளக்கு எரியும். நீங்கள் அத்துறையை எடுத்து கொள்ளலாம். சிவப்பு எரிந்தால் அத்துறை இடங்கள் பூர்த்தி ஆகிவிட்டன என்று அர்த்தம். ஒருவேளை மஞ்சள் எரிந்தால் உங்களுக்கு முன்னர் இருக்கும் மாணவர் எடுக்கும் சீட்டுக்கு ஏற்ப உங்களுக்கு அவ்விடம் கிடைக்கலாம். அதுவரை காத்திருங்கள் என்று அர்த்தம்.
கல்லூரியை தெரிவு செய்ததும், உங்களிடம் அந்தக் கல்லூரிதானா என்று வழிகாட்டும் நபர் உறுதி செய்துவிட்டு உங்களை மேலே அனுப்புவார். அங்கே உங்களுக்கு அந்தக் கல்லூரி கிடைத்ததற்கான உத்தரவை தருவார்கள். அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். கூடவே நீங்கள் தேர்வு செய்த கல்லூரியில் கட்ட வேண்டிய மீத தொகைக்கான வங்கி சலானை தருவார்கள். அதையும் வாங்கிக்கொள்ளுங்கள். குறிப்பிட்டு இருக்கும் தேதிக்கு ஏற்ப மீதிப் பணத்தை கட்ட வேண்டும். இவ்வளவுதான் கவுன்சிலிங்.

பின்குறிப்புகள்:

ஒரு வேளை அழைப்புக் கடிதம் வராமல் போயிருந்தாலும் சிக்கலில்லை. உங்கள் கவுன்சிலிங் நாள் என்று என்று அறிந்துகொண்டு ஒரு மணி நேரம் முன்னரே வந்துவிடுங்கள். என்கொயரி பிரிவுக்கு போய் உங்கள் விண்ணப்ப எண்ணை சொன்னால் உங்களுக்கான அழைப்பு கடிதத்தை தந்து விடுவார்கள்.
குறிப்பிட்ட தினத்தன்று கவுன்சிலிங் வரமுடியாமல் போனால், அடுத்த செஷனில் கலந்துகொள்ள முடியும். எனினும் அப்பொழுது உள்ள இடங்களில் இருந்தே தெரிவு செய்ய முடியும்.
முழுக்க முழுக்க வெளிப்படையாக நடக்கும் இந்த கவுன்சிலிங்கில் சீட் வாங்கித் தருகிறேன் என்று யாராவது பணம் கேட்டால் நம்பவே நம்பாதீர்கள். உங்களின் மதிப்பெண்ணுக்கு உரிய சீட் கண்டிப்பாக கிடைக்கும்.
 
கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

முறையான அங்கீகாரம்!
 காற்றோட்டமான வகுப்பறைகள், நல்ல முறையில் இயங்கும் பரிசோதனைக் கூடங்கள், நூலகங்கள், விடுதி வசதிகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற அடிப்படைக் கட்டுமானங்கள் நல்ல முறையில் இருக்கின்றனவா எனக் கவனித்தல்.
 பேராசிரியர்களின் படிப்பு, அனுபவம் ஆகியவை.
கல்லூரி அமைந்திருக்கும் இடத்தில் போக்குவரத்து வசதிகள், மருத்துவமனைகள் போன்றவை.
 படிப்பு முடிந்ததும் சிறந்த ப்ளேஸ்மென்ட் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றனவா என ஆராய்தல்.
 பிடித்த பாடத்தை, பிடித்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். பல சமயங்களில் பிடித்த பாடம் கிடைக்கும். ஆனால், விரும்பிய கல்லூரியாக இருக்காது. இல்லையென்றால், விரும்பிய கல்லூரி கிடைக்கும். ஆனால், பிடித்த பாடத்தில் இடம் கிடைக்காது. இதுபோன்ற சமயத்தில், எது நமக்குக் கிடைக்கிறதோ அதை நாம் விரும்பிப் படிக்க வேண்டும்.
 நான்கு ஆண்டுகள் கடினமாக உழைத்துப் படித்தால், 40 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழலாம். ஆகவே, என்ன பாடம், எந்தக் கல்லூரியில் கிடைத்தாலும், அதை விரும்பிப் படியுங்கள். மாணவர்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம், சிறந்த முறையில் அடிப்படை வசதிகள்கொண்ட கல்லூரியாக இருக்கிறதா என்பதுதான்!

- பூ.கொ.சரவணன்

நன்றி ஆனந்த விகடன் 

Friday, June 20, 2014

பெயரில்தான் எல்லாம் இருக்கிறது

'பெயரில் என்ன இருக்கிறது?' என்று கேட்டார் ஆங்கில எழுத்தாளர் ஷேக்ஸ்பியர். ஆனால் பலரும் பெயரில்தான் எல்லாமே இருக்கிறது என்பதுபோல் குழந்தை பிறப்பதற்கு முன்பே என்ன பெயர் வைக்கலாம் என்று வீட்டில் பட்டிமன்றமே நடத்துகிறார்கள்.

ஒரு காலத்தில் குழந்தைக்கு ஏதாவது ஒரு தெய்வத்தின் பெயரையோ, அக்குழந்தையின் தாத்தா அல்லது பாட்டியின் பெயரையோ சூட்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால் பெரியவர்களின் பெயரைச் சூட்டினால் குழந்தையை பெயர் சொல்லிக் கூப்பிட முடியாது, திட்ட முடியாது என்பதனால் பேபி, பாப்பா, அம்பி என்றெல்லாம் செல்லப் பெயரிட்டு, பிறகு அந்தப் பெயரே நிலைத்து விடுவதும் உண்டு.

அந்தந்தக் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த திரைப்பட நடிகர், நடிகைகளின் பெயர்கள் சூட்டப்பட்ட காலமும் ஒன்று உண்டு. இப்பொழுது இருக்கவே இருக்கிறது இணையதளம். வலை வீசி நல்ல பெயரைத் தேடிக்கொள்ளலாம். ஆனால் என்னதான் கஷ்டப்பட்டு பெற்றோர் குழந்தைகளுக்குப் பெயர்களைத் தேர்ந்தெடுத்து வைத்தாலும் அவர்கள் பெரியவர்களான பிறகு, தங்களுக்கு பெற்றோர் சூட்டிய பெயர் பிடிக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

நியூமராலஜியில் நம்பிக்கை உள்ளவர்கள் பெயர்களின் "ஸ்பெல்லிங்' ராசியானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்களைப் பொருத்தவரையில் ஆண், பெண் இரு பாலருக்குமே ஒரே மாதிரியான பெயர்களே சூட்டப்படுகின்றன. பெண்ணென்றால் அத்துடன் கெளர் என்ற வார்த்தையும் ஆண் என்றால் சிங் என்ற சொல்லும் இணைக்கப்படும்.

இதற்கான காரணம், சீக்கியர்கள் குழந்தைக்கு வைக்க வேண்டிய பெயரைத் தங்களது புனித நூலான குருகிரந்த சாகிப்பிலிருந்து தேர்ந்தெடுக்கிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு அந்த நூலைத் திறந்து தாங்கள் கை வைக்கும் இடத்தில் எந்தப் பெயர் உள்ளதோ அந்தப் பெயரையே தெய்வத்தின் ஆணையாக ஏற்றுக் கொண்டு தங்கள் குழந்தைக்குச் சூட்டி விடுவார்கள்.

பொதுவாக, திருமணத்திற்குப் பிறகு பல மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு உண்டு. சில பெண்கள் விஷயத்தில் புகுந்த வீட்டினர் பெண்ணின் பெயர் பிடிக்கவில்லை என்று சொல்லி பெயரை மாற்றிக் கொள்ளுமாறு வற்புறுத்துவார்கள்.

திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் பெயருடன் கணவனின் பெயரை இணைத்துக் கொள்வது காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு வழக்கம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது சில பெண்களுக்கு மிகப் பெரிய அடையாளப் பிரச்னையை உருவாக்குகிறது.

ஒரு பெண் திருமணத்திற்கு முன்பே ஒரு சிறந்த பாடகியாகவோ, எழுத்தாளராகவோ, ஆராய்ச்சியாளராகவோ தங்களுடைய கன்னிப் பருவப் பெயரிலேயே பிரபலமாகி இருக்கலாம். திருமணத்திற்குப் பிறகு கணவனின் பெயரை இணைத்துக் கொள்வதால் இவரேதான் அவர் என்று பலருக்குப் புரியாது.

சமீப காலத்தில் இந்தப் பிரச்னைக்கு ஒரு புதிய தீர்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய பெயருடன் தந்தையின் பெயர், கணவனின் பெயர் இரண்டையுமே இணைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம், பிரியங்கா காந்தி வதேரா, ஐஸ்வர்யா ராய் பச்சன், செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் போன்றோர். இன்றைய தலைமுறைப் பெண்கள் கணவனை பெயர் சொல்லி அழைக்கிறார்கள். அல்லது செல்லப் பெயரிட்டு காதல் மொழி பேசுகிறார்கள். ஆனால் அந்தக் காலத்துப் பெண்கள் கணவன் பெயரை உச்சரிக்கக்கூட மாட்டார்கள்.

கணவனின் பெயர் உள்ள யாரையாவது பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால்கூட, "நான் அந்தப் பெயரைச் சொல்ல மாட்டேனே', "அவர் வந்திருக்கிறார்' என்று சுற்றி வளைத்துச் சொல்வதைப் புரிந்து கொள்வதற்குள் நமக்குத் தலையைச் சுற்றும்.

வட இந்தியாவில், குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பங்களில் ஆண்கள் தங்களது மனைவியைப் பெயர் சொல்லிக் கூப்பிடமாட்டார்கள் "ஆஷா கீ மா', "முன்னா கீ மா' என்று தங்களது மூத்த குழந்தைகளின் பெயரைச் சொல்லி "அவனுடைய அம்மா', "அவளுடைய அம்மா' என்றுதான் அழைப்பார்கள். இவர்களெல்லாம் குழந்தை பிறப்பதற்கு முன்பாகவோ அல்லது குழந்தையே இல்லையென்றால் எப்படி அழைப்பார்கள் என்பது தெரியவில்லை.

இன்றும் இந்த நாட்டில் எத்தனையோ குடும்பப் பெண்கள் தங்களுடைய பெயரே வெளி உலகிற்குத் தெரியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். "முத்துசாமி வீட்டம்மா', "ஆறுமுகம் பெஞ்சாதி', "சுப்பையா சம்சாரம்' போன்று கணவனின் பெயரை வைத்தே அறியப்படும், அழைக்கப்படும், அடையாளப்படுத்தப்படும் அளவிற்கு தங்கள் சொந்தப் பெயரை மட்டுமல்ல, தங்களின் சுயத்தையே இழந்து போய் நிற்கிறார்கள் இந்தப் பெண்மணிகள்.

Thanks dinamani 

அரசுப் பள்ளியை ஆதரிப்போம்

அரசு பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை, சுயநிதிப் பள்ளிகளில் படிக்க வைப்பதற்கு தமிழக அரசு நிதி உதவி அளிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்போதுதான் அரசுப் பள்ளிகள் சிறப்பான வளர்ச்சியை பெற முடியும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலா 3 மாணவ } மாணவியர் மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபினைச் சேர்ந்த தலா 2 மாணவ } மாணவிகள் என மொத்தம் 10 பேருக்கு, தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்து படிக்க தமிழக அரசு நிதி உதவி வழங்குகிறது.

மாவட்டத்திற்கு 10 பேர் வீதம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, கல்வி கட்டணம், பராமரிப்பு கட்டணம், விடுதிக் கட்டணம், சிறப்பு பயிற்சி கட்டணம் என ஆண்டொன்றுக்கு ரூ.28 ஆயிரம் வீதம், 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. அரசின் இந்த உத்தரவு, மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர்களை சிறப்பாக உருவாக்கிய ஆசிரியர்களுக்கு மன வருத்தத்தை அளிப்பதாக உள்ளது.

பள்ளியில் நடத்தப்படும் பாடங்களைத் தவிர்த்து, சிறப்பு வகுப்புகள், மாலை நேர வகுப்புகள் என பல்வேறு வழிகளில் பொதுத் தேர்வுக்காக மாணவர்களை தயார் செய்வதால் சில அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுயநிதிப் பள்ளிகள், மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு பாடங்களை முழுமையாக நடத்துவதில்லை. அதற்கு பதிலாக பத்தாம் வகுப்பு பாடங்களை, ஒன்பதாம் வகுப்பின் 2ஆம் பருவ தேர்வுக்கு பின் நடத்துகின்றன.

மேலும் சுயநிதிப் பள்ளிகளில், கல்வி தரத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கின்றனர். 100 சதவீத தேர்ச்சி என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக, தரத்தில் பின் தங்கிய மாணவர்களை வெளியேற்றிவிடுகின்றனர்.

இறுதிக் கட்டத்தில் அவர்களுக்கு புகலிடம் அளிக்கும் இடமாக அமைவது அரசு பள்ளிகள் மட்டுமே. அப்படி வந்து சேரும் மாணவர்களையும் இணைத்துக் கொண்டு, பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், தனியார் பள்ளிகளுக்கு இணையாக இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்த நிலையில் அண்மையில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், 500 முதல் 700க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் தேர்வில் பங்கேற்று 98 முதல் 100 சதவீத தேர்ச்சியை பல அரசு பள்ளிகள் பெற்றுள்ளன என்பது முடிவுகளை உற்று நோக்கியவர்களுக்கு புரியும்.

20 முதல் 200 மாணவர்களுடன் பங்கேற்கும் சுயநிதிப் பள்ளிகளுக்கு மத்தியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்களை சிறப்பாக வழி நடத்தி சாதித்துக் காட்டிய அரசு பள்ளிகளின் தரம் மெச்சத் தகுந்ததே.

மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று, தேர்ச்சி அடைந்த அரசுப் பள்ளி மாணவர்களை, பல்வேறு சலுகைகளுடன் தங்கள் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ப்பதற்கு தனியார் பள்ளிகள் போட்டிபோடுவது வழக்கம். தற்போது மாவட்ட வாரியாக 10 மாணவர்களை தேர்ந்தெடுத்து, பிரபல சுயநிதிப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு அரசே உதவித் தொகை வழங்கி வருகிறது. அரசின் இந்த நடவடிக்கையால், அரசுப் பள்ளிகளின் மதிப்பை உயர்த்தும் நோக்கத்தில் நியாயமாகவும், சேவை மனப்பான்மையுடனும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்துள்ள மாணவர்களை, தனியார் பள்ளிகள் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளும் வெளியேற்றி விடுகின்றன.

இதுபோன்ற சூழ்நிலையில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த தரமான மாணவர்கள், சுயநிதி பள்ளிகளுக்குச் சென்றுவிட்டால் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவதைத் தடுக்க முடியாது. அதன் மூலம் அரசுப் பள்ளிகளின் தரத்தையும் உயர்த்த முடியாத நிலை ஏற்படும்.

கடந்த காலத்தைவிடத் தற்போது அரசுப் பள்ளிகள் மற்றும் மாணவர்களின் தரம் உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அனைத்து அடிப்படை வசதிகளும் அரசுப் பள்ளியில் கிடைக்க வேண்டும்.

அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து அரசு பள்ளிகளிலேயே படிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சுயநிதி பள்ளியில் சேர்ந்து படிக்க வழங்கப்படும் உதவித் தொகையை, அவர்களுடைய தகுதிக்கான பரிசாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுயநிதி பள்ளிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, புதிய சூழ்நிலையும், அங்கு கற்பிக்கப்படும் வழிமுறைகளும் தடுமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மன வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது, இந்த நடைமுறையை மாற்றி, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேலும் உயர்த்த கல்வித் துறை முன்வர வேண்டும்.

Thanks dinamani

பாதுகாப்போம் பள்ளிக் குழந்தைகளை

இன்றைய குழந்தைகள், வருங்கால இந்தியாவின் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பொறுப்புள்ள குடிமக்கள். அதனால்தான் குழந்தைகளின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சி விஷயத்தில் அரசு அதிக அக்கறை காட்டிவருகிறது. அதே நேரத்தில் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை எதிர்கால மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ, விஞ்ஞானிகளாகவோ உருவாக்கவேண்டும் என்ற கனவுகளில்தான் பள்ளிக்கு அனுப்புகின்றனர்.

ஆனால் பள்ளிக்கு அனுப்பிய குழந்தை பாதுகாப்பாக மீண்டும் வீட்டுக்கு வருமா என்பது இன்றைய காலகட்டத்தில் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. சமீபகாலமாக பள்ளிக் குழந்தைகள், பள்ளிக்குச் சென்று வரும்போது விபத்துகளில் சிக்கி பலியாவது அடிக்கடி நிகழ்கிறது.

இதில் மிகவும் வருந்ததக்க விஷயம் என்னவென்றால் இந்த விபத்துகளில் பள்ளிக் குழந்தைகள் பலியாவதற்கு, வாகன ஓட்டுநரோ அல்லது யாரோ ஒருவரின் கவனக்குறைவு காரணமாயிருக்கிறது.

பள்ளி மற்றும் தனியார் வாகனங்களில் புளிமூட்டைகளைப் போல பள்ளிக் குழந்தைகளை அடைத்துக்கொண்டு அசுரவேகத்தில் செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்களை தினசரி நாம் காணலாம். அரசு என்னதான் சட்டங்களைக் கடுமையாக்கினாலும், அதிகாரிகள் ஆங்காங்கே வாகனத் தணிக்கை நடத்தினாலும் இதுபோன்ற விதிமீறல்களை முற்றிலுமாகக் குறைக்க முடிவதில்லை.

தினசரி ஒரே பாதையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநருக்கு நன்றாகத் தெரியும் எங்கெங்கே போலீஸார் மற்றும் போக்குவரத்துத் துறையினர் தணிக்கையில் ஈடுபடுவார்கள் என்று. அக்குறிப்பிட்ட பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் வரும்போது கைப்பேசியை பயன்படுத்திக்கொண்டும், அதிவேகமாகவும்தான் வாகனங்களை இயக்குகின்றனர்.

முதன்முறையாக சென்னையில் பள்ளி மாணவி ஒருவர், பள்ளி பஸ்ஸின் உள்பகுதியில் இருந்த ஓட்டை வழியே கீழே விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தபோதுதான் அரசாங்கம் விழிப்படைந்து பல்வேறு புதிய விதிமுறைகளையும், சட்ட திட்டங்களையும் பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு விதித்தது.

ஆனால், இவை எந்தளவுக்கு கடைபிடிக்கப்படுகின்றன என்பது சர்ச்சைக்குரிய விஷயமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு கல்வியாண்டின் துவக்கத்திலுமோ அல்லது எப்போதாவது விபத்துகள் நிகழும்போதோ மட்டும்தான், சட்டம் தன் கடமையைச் செய்கிறது. மற்ற நேரங்களில் யாரும், எதையும் கண்டுகொள்வதில்லை.

அதையும் மீறி, விதிமீறல் என வாகனங்களைப் பிடித்தால், அவர்கள் தங்கள் சங்கங்கள் மூலமாக வேலைநிறுத்தம், பேரணி, போராட்டம் என பிரச்னையில் ஈடுபடுகின்றனர். பள்ளி வாகனங்களை முறையாகப் பராமரிக்கவில்லை என பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்தாலும் இதே பிரச்னைகள்தான் உண்டாகின்றன. ஆனால் சாலை விதி மீறல், அசுரவேகம், கவனக்குறைவு என ஓட்டுநர்கள் செய்யும் தவறுகளுக்கு அநியாயமாக சாலையில் விழுந்து பழியாவது யாரோ பெற்ற அப்பாவி பச்சிளம் குழந்தைகள்தான்.

இப்பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தாங்களே, தங்கள் சொந்த வாகனங்களில் பள்ளிக்கு அழைத்துச் செல்வதுதான். பெரும்பாலான பெற்றோர் 9 மணி பள்ளிக்கு, பிள்ளைகளை ஆட்டோவிலோ, வேறு வாகனங்களிலோ 8.30 மணிக்கு அனுப்பிவிட்டு, பிறகு 10 மணி வேலைக்கு, இவர்கள் 9.30 மணிக்கு மேல் அரக்கப்பரக்க புறப்பட்டுச் செல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இத்தகைய அவசரம்தான் பல்வேறு விபத்துகளுக்கு காரணமாகிறது. குழந்தைகளோடு சேர்ந்து அரை மணி நேரம் முன்கூட்டியே கிளம்பி, அவர்களையும் பள்ளியில் பாதுகாப்பாகச் சேர்த்துவிட்டு, தானும் வேலைக்கு நிதானமாக செல்லலாம் என்ற மனப்பக்குவத்துக்கு பெற்றோர்கள் வரவேண்டும்.

மேலும், போக்குவரத்து அதிகாரிகளும் வாரம் ஓரிரு முறை சாதாரண உடையில் மாவட்டம் அல்லது நகரம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு, விதிமீறல் வாகனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். வாகனங்கள் பாதுகாப்பான, விரைவான பயணத்துக்குத்தானே தவிர, பந்தயத்துக்கோ அல்லது மற்றவரின் உயிரை எடுப்பதற்கோ அல்ல என்பதை ஓட்டுநர்களுக்கு விளக்கவேண்டும்.

உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகன ஓட்டுநரின் உரிமம் நிரந்தரமாக பறிக்கப்படுவதுடன், வாகனமும் சாலையில் இயக்கத் தகுதியற்றது எனச் சான்று வழங்கினால் விபத்துகள் குறைய வாய்ப்புள்ளது.

மேலும், அரசு மற்றும் தனியார் பேருந்து, பள்ளி, கல்லூரி வாகனங்கள் என அனைத்துக்குமே வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைக் கட்டாயமாக்கினால் விபத்துகள் குறைவதற்கு வாய்ப்புண்டு. சட்டங்கள் கடுமையானால்தான் விபத்துகள் குறையும்.

Thanks dinamani 

திருநங்கைகள் செய்த பாவமென்ன?

அரசுப் பணியிலோ அல்லது தனியார் நிறுவனப் பணியிலோ முக்கியப் பணியிடத்தில் சேருவதற்கான தகுதி அனைத்தையும் கொண்டிருக்கிறேன். ஆனால், நான் ஒரு திருநங்கை என்பதால், சக பணியாளர்களின் கேலிப் பேச்சுக்கு ஆளானேன். எனது பணியில் அதிக அளவில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு சமயத்தில் பணியிலிருந்தும் வெளியேற்றப்பட்டேன்'

"நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தேன். நான் திருநங்கை என்பதால், எனது குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டேன். நான் பிறந்த ஊரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் வசிக்கிறேன். தினமும் நான் பிறந்த ஊர் வழியாகச் செல்கிறேன். எனது சகோதரி என்னைப் பார்த்தாலும் சைகையினாலேயே பேசுகிறார். இது மன வலியை ஏற்படுத்துகிறது?

"நான் நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறேன். அங்கு நடனம் கற்பது தொடர்பாக விசாரணைக்கு வருவர். நான் திருநங்கை என்று தெரிந்ததும், பேச்சை மாற்றி அங்கிருந்து சென்று விடுகின்றனர். வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும்போது, பாழாய்ப்போன சமூகம் விடமாட்டேன் என்கிறது'
- இவையெல்லாம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் திருநங்கைகள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சியில் தங்களது உள்ளக்கிடக்கையை உணர்ச்சிப்பூர்வமாகவும், இந்த சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட ஜென்மமாக உள்ளோமே என்ற வேதனையுடனும் தெரிவிக்கப்பட்டவை.

அவற்றை அழுகையுடனும் ஆக்ரோஷமாகவும், ஆணித்தரமாகவும் அவர்கள் வெளிப்படுத்தினர். அவர்களின் ஒட்டுமொத்தக் கேள்வி நாங்கள் புறக்கணிக்கப்பட்டவர்களா? என்பதே.

தமிழ்நாட்டில் அரவாணிகள் என்றழைக்கப்படும் திருநங்கைகள் சுமார் 3,000 பேர் வசிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் என்ற இடத்தில் ஆண்டுக்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் கூடி, திருவிழா நடத்துகின்றனர்.

இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகளும் கலந்து கொள்கின்றனர். இதில் சந்தோஷம், துக்கம் என அனைத்தும் கலந்திருக்கும்.

ஆண், பெண் என இரு பாலினங்கள் உள்ளதுபோல, ஆணாகப் பிறந்து பெண்ணின் தன்மைகளைப் பெறும் திருநங்கைகளை மூன்றாவது பாலினம் என தமிழக அரசு அடையாளம் காட்டியுள்ளது.

இவர்களுக்கு சமூகநலத் துறையில் தனிப் பிரிவே துவக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை வழங்க வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எழுதி அதில் திருநங்கைகள் வேலைவாய்ப்பையும் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மதுரை மக்களவைத் தொகுதியில் ஒரு திருநங்கை சுயேச்சையாகப் போட்டியிட்டார். தேவாலயத்தின் பாதிரியாராகவும் திருநங்கை நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்படி வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இந்த மூன்றாம் பாலினத்தினரை முன்னேற விடாமல், பலரும் தடுக்கின்றனர் என்பது இவர்களது குற்றச்சாட்டு. "எங்களை இந்த சமுதாயம் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறது. நாங்கள் மூன்றாவது பாலினமாகப் பிறந்தது எங்களது குற்றமா?

ஊனமுற்ற குழந்தையையோ, மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையையோ பெற்றோரும், உடன் பிறந்தோரும் புறக்கணிக்கின்றனரா? எங்களை மட்டும் புறக்கணிப்பது ஏன்? இதனால் நாங்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறோம்.

பாலியல் தொழிலும், பிச்சை எடுத்தலும் என்ன எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட தொழிலா? முந்தைய காலத்தில் கல்வியறிவு பெறாமல் இதுபோன்ற புதைகுழியில் தள்ளப்பட்டிருக்கலாம்.

ஆனால், இப்போது ஒவ்வொரு திருநங்கையும் அவர்களால் இயன்ற அளவில் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கின்றனர். ஆனால், இந்த சமுதாயம் முன்னேற விடாமல் தடுக்கிறது. பல்வேறு துறைகளில் பலரும் பிரகாசித்து வரத் துவங்கியுள்ளனர்.

எங்களது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற பல்வேறு அமைப்புகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. பலரும் எழுதி வருகின்றனர். இருந்தும், எங்களை இந்தப் புதை குழியில் தள்ளியதே இந்தச் சமுதாயம்தான்.

"ஒரு வீட்டில் ஒரு சிறுவன் காணாமல் போனால், நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கின்றனர். காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். திருநங்கையாகிய எங்களைக் காணவில்லை, கண்டுபிடித்துத் தாருங்கள் என்று எந்தப் பெற்றோராவது காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்களா? நாங்கள் என்ன பாவம்  செய்தோம்?

முதலில் எங்களது பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் எங்களை ஏற்றுக் கொள்ளட்டும். அதன் பிறகு சமுதாயத்தில் ஏற்படும் மாற்றத்தைப் பாருங்கள்' என்றும் கூறுகின்றனர் திருநங்கைகள்.

நியாயம்தானே?

Thanks Dinamani

Wednesday, June 18, 2014

பி.இ., படிப்பின் தரத்தை உயர்த்துவதற்கு, அண்ணா பல்கலை நடவடிக்கை !!!

பி.இ., படிப்பின் தரத்தை உயர்த்துவதற்கு, அண்ணா பல்கலை, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள, 560 பொறியியல் கல்லூரிகளிலும், மிக சிறப்பாக பாடம் நடத்தக்கூடிய ஆசிரியரை கண்டறிந்து, அவர்களை, ஒரு குழுவாக சேர்த்து, அவர்கள் மூலம், பிற ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்க, அண்ணா பல்கலை, நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், பி.இ., படிப்பிற்கு, மாணவர்கள் முட்டி மோதுவர்.இந்த ஆண்டு, மாணவர்கள் ஆர்வம், சற்று குறைவாக உள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள், விற்பனை யான போதும், 1.73 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். இவர்களில், 1.68 லட்சம் பேரின் விண்ணப்பம் மட்டும் ஏற்கப்பட்டுள்ளது.பொறியியல் படிப்பில், ஆர்வம் குறைவதற்கு, படிப்பை முடித்தாலும், வேலைக்கு தகுதியானவர்களாக, மாணவர்கள் தயாராகவில்லை என்பது, நிறுவனங்களின் கருத்தாக உள்ளது. முக்கியமாக, பி.இ., மாணவர்களுக்கு, ஆங்கிலத்தில் தகவல் தொடர்பு கொள்ளும் திறன் இல்லை என்பது, பெரிய குறையாக கூறப்படுகிறது.இதனால், போதிய வேலை வாய்ப்பு இல்லை என்ற தகவல் பரவுகிறது. இதன் காரணமாக, பி.இ., படிப்பிற்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை, இந்த ஆண்டு சரிந்துவிட்டது.இந்த பிரச்னைகள் அனைத்தை யும் உணர்ந்துள்ள அண்ணா பல்கலை, பி.இ., படிப்பை, பழையபடி, தூக்கி நிறுத்தவும், மாணவர்களுக்கு, உரிய தகுதியை அளிக்கவும், பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஆசிரியர்கள்

திறமையான மாணவர்களை உருவாக்க, கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதி, தகுதியான ஆசிரியர்கள் தேவை. பெரும்பாலான தனியார் கல்லூரிகளில், ஆசிரியர்கள் முழு தகுதி பெற்றவர்கள் அல்ல.
சுற்றறிக்கை

மாநிலம் முழுவதும் உள்ள, 560 பொறியியல் கல்லூரிகளிலும், சிறப்பாக பாடம் நடத்தக்கூடிய திறமையான ஆசிரியர்களை கண்டறிந்து, அவர்கள் அனைவரையும், ஒரு குழுவாக இணைத்து, அவர்கள் மூலம், பிற கல்லூரி ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்க, பல்கலை திட்டமிட்டு உள்ளது. இதற்காக, ஒவ்வொரு கல்லூரிக்கும், ஒரு சுற்றறிக்கையை, அண்ணா பல்கலை அனுப்பி உள்ளது. அதில், 'ஒவ்வொரு பாட பிரிவிலும், மிகச் சிறப்பாக பாடம் நடத்தக் கூடிய ஆசிரியரை, கல்லூரி நிர்வாகம், அடையாளம் காண வேண்டும். பின், அவர்கள், பாடம் நடத்துவதை, 'வீடியோ'வாக எடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியரின் முழு விவரங்களையும் சேர்த்து, பல்கலைக்கு அனுப்ப வேண்டும்' என, தெரிவித்து உள்ளது. இது போன்ற வீடியோக்களை, அனைத்து கல்லூரிகளில் இருந்து பெற்றதும், அதில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்களை அழைத்துப் பேசி, அவர்களை ஒரு குழுவாக இணைத்து, அனைத்து கல்லூரி களின் ஆசிரியர்களுக்கும், பயிற்சி அளிக்க, முடிவு செய்துள்ளது.
இணையதளம்

மேலும், சிறந்த ஆசிரியர்களின் கற்பித்தலை, இணையதளம் வழியாக, 'லைவ்' நிகழ்ச்சியாக, அனைத்து கல்லூரிகளுக்கும் ஒளிபரப்பவும், பல்கலை ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பிட்ட ஆசிரியரின் சொற்பொழிவு, வகுப்புகள் குறித்து, முன்கூட்டியே, அனைத்து கல்லூரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். விருப்பம் உள்ள மாணவர்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியரின் சொற்பொழிவை, வகுப்புகளை, தங்கள் கல்லூரிகளில் இருந்தபடியே பார்க்கலாம். இந்த திட்டங்கள், மிக விரைவில், அமலுக்கு வரும் என, பல்கலை வட்டாரம், நேற்று தெரிவித்தது. சரிந்துள்ள பி.இ., படிப்பின் மதிப்பை, தூக்கி நிறுத்தவும், பி.இ., படிக்கும் மாணவர்கள், வேலை வாய்ப்பிற்குரிய தகுதியை பெறவும், அண்ணா பல்கலை எடுக்கும் நடவடிக்கைகள், எந்த அளவிற்கு பலனை அளிக்கிறது என்பது, வரும் ஆண்டுகளில் தெரியும்.
2,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி

பி.இ., கலந்தாய்வுக்குப் பின், முதலாம் ஆண்டில் சேர உள்ள மாணவர்களுக்கு, வகுப்பு பாடங்களை எடுப்பதற்கு முன், அவர்களை, பொறியியல் படிப்பு படிக்க, மன ரீதியாக எப்படி தயார்படுத்த வேண்டும் என்பதற்காக, 2,500 ஆசிரியர்களுக்கு, அண்ணா பல்கலை பயிற்சி அளிக்கிறது.இந்த பயிற்சி, நேற்று, பல்கலை வளாகத்தில் துவங்கியது. வரும், 26ம் தேதி வரை, தொடர்ந்து பயிற்சி நடக்கிறது. இதில், அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களும் கலந்து கொள்கின்றனர்.கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் பாட ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆக., 15 வரை

இது குறித்து, பல்கலை துணைவேந்தர், ராஜாராம் கூறியதாவது:பிளஸ் 2 முடித்து, பொறியியலுக்கு வரும் மாணவர்கள், பயப்படாமல், பி.இ., படிப்பை எதிர்கொள்ளும் வகையிலும், மன ரீதியாக, அவர்கள், பி.இ., படிப்பதற்கு தயார்படுத்தும் வகையிலும், இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.மாநிலம் முழுவதிலும் இருந்து, 2,500 ஆசிரியர் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு, சிறந்த ஆசிரியர் குழு, புதிய மாணவர்களை, எப்படி அணுக வேண்டும்; அறிவியல், ஆங்கிலம், கணிதம் பாடங்களை, எப்படி கற்க வேண்டும்; பிளஸ் 2 வகுப்பில், அவர்கள் படிக்காமல், விடுபட்ட பகுதி களை, எப்படி படிப்பது என்பது உள்ளிட்ட, பல தகவல்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சியாக தரப்படும்.ஆகஸ்ட், 1ம் தேதி முதல், 15ம் தேதி வரை, புதிய மாணவர்களுக்கு, இந்த பயிற்சி அமல்படுத்தப்படும். இதன் மூலம், பொறியியல் பாடங்களை நன்கு புரிந்துகொள்வதுடன், நம்பிக்கையுடன், பி.இ., படிப்பை படிப்பர்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தகுதியான ஆசிரியரே முக்கியம்

பொறியியல் கல்வியின் தரத்தை உயர்த்த, அண்ணா பல்கலை பல நடவடிக்கைகளை எடுத்தாலும், அனைத்து கல்லூரி களிலும், தகுதிவாய்ந்த ஆசிரியர் பணியாற்றுவது, மிகவும் முக்கியம்.அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே தகுதிவாய்ந்த ஆசிரியர் பணிபுரிகின்றனர்.

*இன்ஜினியரிங் கல்லூரிகளில் துறைத் தலைவர்கள், அறிவியல் பாடங்கள் மற்றும் ஆங்கில பாடங்களை கையாளும் ஆசிரியர், கண்டிப்பாக, பி.எச்டி., பட்டம் பெற்றிருக்க வேண்டும். அண்ணா பல்கலை கல்லூரி கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில், பி.எச்டி., பட்டம் பெற்றவர்கள் பணியாற்றுகின்றனர்.

*ஆனால், தனியார் கல்லூரிகளில், பி.எச்டி., முடித்தவர்கள், அதிகளவில் பணியில் இருப்பதில்லை. எம்.இ.,- எம்.பில்., படித்தவர்கள், வகுப்பு எடுக்கின்றனர். சில தனியார் கல்லூரிகளில் வெறும் பி.இ., படித்தவர்கள் கூட, ஆசிரியர்களாக இருக்கின்றனர்.

*அண்ணா பல்கலை பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 'தகுதி வாய்ந்த ஆசிரியர் இல்லாவிட்டால், கல்லூரி பாட பிரிவுகளுக்கான இடங்களை குறைப்பது உள்ளிட்ட, நடவடிக்கைகளை எடுக்கிறோம். ஆனாலும், தகுதியில்லாத ஆசிரியர் பணியாற்றுவது, தனியார் கல்லூரிகளில் தொடரத் தான் செய்கிறது. இதை, எப்படி கட்டுப்படுத்துவது என, எங்களுக்கும் புரியவில்லை' என, வேதனையுடன் தெரிவித்தார். தனியார் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்யும் முன், கல்லூரி களின் கட்டமைப்பு எப்படி உள்ளது, ஆசிரியர்களின் தகுதி என்ன? கல்லூரிகளில் படித்த மாணவர்கள் சொல்வது என்ன என்பது போன்ற வற்றை தெரிந்து கொள்ள வேண்டும். கல்லூரிகளின் இணைய தளத்தில் சென்று இதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
Source: Dinamalar