Blogger Widgets

Total Page visits

Monday, April 28, 2014

எந்த பாட பிரிவுகளுக்கு மாணவர்களிடம் வரவேற்பு?

பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர மே 3 முதல் மாநிலம் முழுவதும் விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது. இதற்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சடித்து 56 வினியோக மையங்களுக்கு அனுப்பும் பணியை அண்ணா பல்கலை மும்முரமாக செய்து வருகிறது.
உயர் கல்வியில் பல வகையான படிப்புகள் கொட்டிக் கிடந்தாலும் மாணவ, மாணவியரின் விருப்பமாக பொறியியல், மருத்துவ படிப்புகள் தான் இருக்கின்றன. குறிப்பாக, பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த ஆண்டு 2.34 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆனது. விண்ணப்பம் விற்பனை துவங்கிய முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்தனர். முன்னணி கல்லூரியில் படித்தால் இறுதியாண்டு படிக்கும்போதே கைமேல் வேலைக்கான உத்தரவு கடிதம் கிடைக்கும் என, மாணவர்கள் கருதுகின்றனர். அதனால், கலந்தாய்வு துவங்கியதும் "டாப்" தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மள மளவென நிரம்பிவிடும்.
குழப்பம்
மாணவர்களுக்கு "சீட்" கிடைத்துவிட்டாலும் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது, எந்த பிரிவை படித்தால், உடனே வேலை கிடைக்கும் என்பதில், குழப்பம் ஏற்படுகிறது. இப்படி குழம்பும் மாணவ, மாணவியர் கடந்த கால கலந்தாய்வு முடிவை பார்த்தால் ஓரளவு தெளிவு கிடைக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே மெக்கானிக்கல், சிவில், இ.சி.இ., (எலெக்ட்ரிகல் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்) போன்ற பிரிவுகளை மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்கின்றனர்.
கடந்த ஆண்டு மெக்கானிக்கல் பிரிவை 31,184 பேர்; இ.சி.இ. பிரிவை 24,291; சிவில் பிரிவை 18,095; கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை 15,363 பேர் தேர்வு செய்தனர். அதற்கு முந்தைய ஆண்டும், இதே நிலை தான். இந்த ஆண்டும், மெக்கானிக்கல், சிவில், இ.சி.இ., போன்ற பாடப் பிரிவுகளுக்கு கிராக்கி இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: இந்த ஆண்டும், சிவில், எலெக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு அதிக வரவேற்பு இருக்கும். மெக்கானிக்கல் பிரிவையும் அதிக மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். இ.சி.இ. படிக்கும் மாணவர்களில் 89 சதவீதம் பேருக்கு ஐ.டி., நிறுவனங்களில் தான் வேலை கிடைக்கிறது. தரமான, முன்னணி கல்லூரியில் சேர்ந்து நன்றாக பொறியியல் படித்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
ஆங்கில திறன்
படித்த உடன் வேலை வாய்ப்பை எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் தகவல் தொடர்பு கொள்ளும் திறன் மிக மிக முக்கியமானது. இந்த தகுதி இல்லாத மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது சிரமம் தான். "சிவில்" பாடப் பிரிவை படித்தாலும் உடனே வேலை வாய்ப்பு கிடைக்கும். கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் "டிமாண்ட்" இருக்கும். இவ்வாறு, ஜெயப்பிரகாஷ் காந்தி கூறினார்.
கடந்த ஆண்டு நிலவரம்
கடந்த ஆண்டு 2.34 லட்சம் விண்ணப்பம் விற்பனை ஆனது. அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகள் தாமாக முன் வந்து அண்ணா பல்கலைக்கு "சரண்டர்" செய்த இடங்கள் என, மொத்தம் 2 லட்சத்து 7,141 இடங்கள் கலந்தாய்வுக்கு வந்தன. இதில், இறுதியாக 1 லட்சத்து 27 ஆயிரத்து 838 இடங்கள் நிரம்பின. 79,303 இடங்கள் நிரம்பவில்லை. இந்த ஆண்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் கலந்தாய்வுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: