Blogger Widgets

Total Page visits

Monday, February 24, 2014

'வாட்ஸ்அப்' கண்டுபிடிப்பாளரின் போராட்டம் நிறைந்த வாழ்க்கை

பிரபல, 'வாட்ஸ்அப்' தொழில்நுட்பத்தால், 1,200 கோடி ரூபாய்க்கு அதிபதியான, ஜான் கூமின், கடந்த கால வாழ்க்கை, போராட்டம் நிறைந்தது.

உலகம் முழுவதும், மொபைல் போன் பயன்பாட்டாளர்களிடையே, 'வாட்ஸ்அப்' மென்பொருள் புகழ் பெற்று விளங்குகிறது. தங்கள் கையில் உள்ள, மொபைல் போன் மூலம், உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ளவர்களுடன், குறுஞ்செய்திகள் மற்றும் படங்களை எளிதாக, குறைந்த கட்டணத்தில் அனுப்பி வருகின்றனர். கடந்த வாரம், இந்த மென்பொருளை, 'பேஸ்புக்' சமூக வலைதளம், 1.15 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கியதுடன், ஜான் கூமை, தன்னுடைய இயக்குனர்கள் குழுவில் ஒருவராக நியமித்தது. ஆனால், ஜான் கூம், இந்த நிலையை அடைய, பெரும் போராட்டம் நடத்தியுள்ளார். சோவியத் யூனியன் உடைந்த பிறகு, உக்ரைனில், யூதர்களுக்கு எதிரான போலீசாரின் அடக்குமுறையில் இருந்து தப்பித்து, தாயுடன், அமெரிக்காவிற்கு குடியேறிய கூம், பழைய நோட்டுப் புத்தகங்களுடன், ஒரு வேளை உணவுக்காக வரிசையில் காத்திருக்க நேரிட்டது. பின்னர், ஒரு மளிகைக் கடையில், தரையை சுத்தம் செய்யும் பணியை செய்தவாறு, கல்லூரி படிப்பை முடித்தார். அவருடைய தாய்க்கு புற்றுநோய் தாக்கியிருப்பதை அறிந்த அமெரிக்க அரசு, மருத்துவத்திற்காக நிதியுதவி அளித்தது. கல்லூரி படிப்பை முடித்த பிறகு, சிலிகான் வேலியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிறுவனப் பணியில் சேர்ந்தார். அங்கு, கலிபோர்னியாவைச் சேர்ந்த, பிரையன் ஆக்டன் நண்பரானார். கூமின் தாய் இறந்த பின், அவருக்கு ஆக்டன் ஆதரவளித்தார்; இருவரும் இணைந்து யாகூவில் பணியாற்றியவாறு, தங்களுடைய கண்டுபிடிப்பில் ஈடுபட்டனர். கடந்த 2007ல், யாகூவை விட்டு வெளியேறிய பின், மொபைல் போன்களில் பயன்படுத்தும், 'வாட்ஸ்அப்' அப்ளிகேஷனை வெற்றிகரமாக தயாரித்து செயல்படுத்தினர்.

இன்று, பேஸ்புக், டுவிட்டரை விட, அதிகளவில், இந்த அப்ளிகேஷனை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எந்த இடத்தில், ஒரு வேளை உணவுக்காக, தன் தாயுடன் வரிசையில் நின்றாரோ, அதே சிலிகான் வேலி பகுதியில் அமைந்துள்ள, பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகத்தில், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். பதினாறு வயதில் இருந்து போராடத் துவங்கிய கூம், தன்னுடைய, 38வது வயதில் கோடீஸ்வரராகி சாதித்துள்ளார்.

Source dinamalar

No comments: