Blogger Widgets

Total Page visits

Friday, January 17, 2014

பொறியியல் படித்த பின் என்ன செய்யலாம்?

இந்தியாவில் அதிக பொறியாளர்களை உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதிக அளவில் வெளியேறும் பொறியாளர்கள் அனைவரும் "வேலைக்கு சென்று விடுகின்றனரா?" அல்லது "மேற் படிப்பு படிக்கின்றனரா?" அல்லது இவற்றைத் தவிர வேறு எதுவும் செய்கின்றனரா? செய்யலாம் எனில் அதற்கான வழிமுறைகள் என்ன?
முதுநிலை
ஆசிரியப் பணியை விரும்புவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்த துறையிலேயே எம்.இ. அல்லது எம்.டெக். படிக்கலாம். மேலும் ஆராய்ச்சி துறையை தேர்ந்தெடுக்க விரும்புவர்கள் மேற்கொண்டு பிஎச்.டி. படிக்கலாம். 
வேலைவாய்ப்புகள்
நன்கு திறமையானவராக இருந்தால் கல்லூரி வளாகத்தேர்வு மூலமாக வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. குடும்ப பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு வேலைக்கு செல்ல விரும்புபவர்கள் தன்னம்பிக்கையோடு திறமைகளை மேம்படுத்தி வேலை தேடலாம்.
முதுநிலை பட்டய படிப்புகள்
மேற்படிப்பினை விரும்பவில்லை எனினும் அவசியமானது டிப்ளமோ படிப்புகளாகும். தங்களை வேலைக்கு தயார் படுத்திக்கொள்ளவும், துறை சார்ந்த அறிவை மேம்படுத்திக்கொள்ளவும் டிப்ளமோ படிப்புகள் உறுதுணையாக இருக்கும். இப் படிப்புகளின் காலம் மூன்று மாதத்திலிருந்து ஒரு வருடம் வரையாகும்
மேலாண்மை படிப்பு
எம்.இ., எம்.டெக். படிக்க விரும்பாதவர்ள் எம்.பி.ஏ. படிக்கலாம். எம்.பி.ஏ. வில் ஏகப்பட்ட துறைகள் உள்ளன. விரும்பும் துறையை தேர்ந்தெடுக்கலாம். நிர்வாகவியல் படிப்பானது தான் படித்த துறையிலேயே நிர்வாக ரீதியாக உயர்வதற்கு வழி வகுக்கும்.
அரசுத் துறை
அரசுத் துறையில் இணைந்து சாதனை புரிய விரும்புபவர்கள் தகுந்த முன் தயாரிப்போடு தமிழக அரசால் நடத்தப்படும் குரூப் தேர்வுகள், மத்திய அரசால் நடத்தப்படும் யு.பி.எஸ்.சி. தேர்வுகள், பாதுகாப்புத் துறை சார்ந்த தேர்வுகள் மற்றும் இதர அரசு நிறுவங்களால் நடத்தப்படும் தேர்வுகள்  போன்றவற்றை எழுதி அரசுத்துறையில் இணையலாம்.
வெளிநாட்டில் படிக்கலாம்
சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை தேர்வு செய்து மேற்படிப்புக்களை வெளி நாட்டில் படிக்கலாம். நாட்டிற்கு நாடு கல்வி முறையில் சிறிது மாற்றங்கள் இருப்பதால் பி.இ. இறுதியாண்டு படிக்கும்பொழுதே தயாரானால் கால விரயத்தை தவிர்த்து அதே ஆண்டில் மேற்படிப்பில் இணையலாம். இல்லையெனில் 6 மாதத்திலிருந்து 1 வருடம் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.
சொந்தத் தொழில்
தங்களுக்கு தொழில் செய்ய வாய்ப்பிருந்தாலோ அல்லது ஆர்வம் இருந்தாலோ தயங்காமல் துணிந்து, ஆராய்ந்து தொழில் புரிய ஆயத்தமாகிவிட வேண்டும். ஏனெனில் இந்திய வளர்ச்சிக்கு தொழில் முனைவோரின் எண்ணிக்கையும், வளர்ச்சியும் தூண்டுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
துணிந்து செயல்படுங்கள்
படித்து முடித்தவுடன் எடுத்து படித்த துறையினை தவிர்த்து, ஒரு சிலருக்கு வேறு துறையின் மேல் ஆர்வம் வர வாய்ப்பிருக்கிறது. விவசாயம், ஊடகம், திரைத்துறை, மார்க்கெட்டிங் போன்ற பல துறைகள் இருப்பதால் படித்த கல்வி வீணாகி விடுமோ என்று கவலை கொள்ளாமல், தங்களுக்கு ஆர்வம் உள்ள துறை எதுவாகினும் துணிவோடு இறங்கி வெற்றி காண்பதே படித்த கல்விக்கு அழகு

No comments: