Blogger Widgets

Total Page visits

Tuesday, June 23, 2015

அத்தியாயம் 16-முடிவே முழுமை

வ்வொரு நாளும், பல்வேறு தருணங்களில் நாம் வெவ்வேறு முடிவுகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அந்த முடிவுகளை ஒரு வரிசைப்படுத்திப்பார்த்தால், அதன் விளைவுகளில் இருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்று பார்க்கலாம்.
ஆனால், ஏதாவது ஒரு முடிவை எடுத்துவிட்டு அதனால் ஏற்படும் விளைவுக்கு மட்டும் நான் பொறுப்பல்ல என்ற நினைப்புதான் மிகவும் ஆபத்தானது. அல்லது, எடுத்த முடிவால் ஏற்பட்ட எதிர் விளைவை நினைத்து வருந்திக்கொண்டே இருப்பதும், அதனால், இனி இதுபோன்ற முடிவே எடுக்கக்கூடாது என்று முடிவெடுப்பதும் அடுத்த கட்டத் தவறுகள்.
உதாரணமாக, ஒரு தூரத்து ஊருக்குச் செல்லவேண்டும். பஸ்ஸில் போகலாமா? இரயிலில் போகலாமா? என்று குழப்பம். பல்வேறு காரணிகளை ஆராய்ந்து பஸ்ஸில் போகலாம் என்று முடிவெடுக்கிறீர்கள். பஸ் மிகமிகத் தாமதமாகக் கிளம்புகிறது. மழை வேறு பெய்கிறது. நீங்கள் போகவேண்டியது 8 மணி நேரப்பயணம். பஸ் ஒழுகுகிறது. திண்டாடிப்போகிறீர்கள். போய் இறங்கும்போதும் கிட்டத்தட்ட 15 மணி நேரம் ஆகியிருக்கிறது. கோபம் கோபமாக வரும்.
இதுக்குத்தான் நான் பஸ்ஸிலேயே போகவேண்டாம்னு நினைச்சேன் என்று சொல்வீர்கள். அல்லது, உங்கள் கூட வந்தவர்கள் தோழர், மனைவி, உறவு என்று யாராக இருந்தாலும் அவர்களது தூண்டுதல்தான் காரணம் என்று அவர்கள் மீது குறை சொல்வோம். பிறகு, அடுத்தமுறை எதில் போவது என்று முடிவெடுக்க வேண்டி வரும்போது, பஸ்ஸில் போன பிரச்னை நினைவுக்கு வந்து, இனிமேல் பஸ்ஸிலேயே போகவேண்டாம் என்று முடிவுக்கு வருவோம். ஆனால், இதுவும் ஒரு முடிவாக ஆகிவிடும்.
ஆனால், இப்படி யோசிக்கலாம்.! முதலில் இரயிலிலா? பஸ்ஸிலா? என்று முடிவெடுக்கும்போதே, தட்பவெப்ப நிலையையும் கணக்கில் எடுத்துகொண்டிருக்கலாம். எந்த பஸ்ஸில் போகப்போகிறோம்? அதனைப்பற்றி ஏற்கனவே சென்றவர்கள் என்ன கருத்து சொல்கிறார்கள் என்று பார்த்திருக்கலாம். அதனையும் மீறி, நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் நடக்கும்போது, இயல்பாக எதிர்கொள்ளலாம். ஆனால், நாம் எடுத்த முடிவு நம்மீது திணிக்கப்பட்டது என்றோ, இனிமேல் இதுபோன்ற முடிவே எடுக்கக்கூடாது என்றோ பொத்தாம் பொதுவாக அடுத்த முடிவெடுத்தால், அது புத்திசாலித்தனமாக இருக்காது.  அதாவது, ஏன் பஸ்ஸில் போகவேண்டும் என்பதற்கு ஒரு சரியான, புத்திசாலித்தனமான காரணம் இருந்தால், பின்னர் வரும் பிரச்னைகளும் உங்களுக்கு அடுத்து முடிவெடுக்கும்போது கணக்கில் கொள்ளவேண்டிய காரணிகளுக்குள் வந்துவிடும்.
நிறுவனங்கள், நம்மிடம் முடிவெடுப்பதில் புத்திசாலித்தனத்தையும், ஆய்வுத்திறனையும், கவனித்தலையும் எதிர்பார்க்கின்றன. காரணங்களையோ, கவலைகளையோ அல்ல!  ஆக, முடிவெடுத்து, அதனை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நமது முடிவெடுக்கும் திறன் வளரும்.


ஒரு நேர்முகத்தேர்வில், பங்கேற்பாளரின் முடிவெடுக்கும் திறனை எப்படி எடைபோடுவார்கள்?
முடிவெடுக்கும் திறனை அளக்கும் கேள்விகள் இப்படித்தான் இருக்கும்!
ஏன் பொறியியலில் எலக்ட்ரானிக்ஸை எடுத்தீங்க?
பனிரெண்டாம் வகுப்பில் ஏன் இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்தீங்க?
உங்க க்ளோஸ் ஃப்ரெண்ட் என்ன படிச்சார் ?
ஃபைனல் இயரில் அந்தப் பிராஜக்ட் எடுக்கணும்னு ஏன் முடிவெடுத்தீங்க?
அந்தக் காலேஜில் ஏன் சேர்ந்தீங்க?
கலை, அறிவியலில் ஏன் உங்களுக்கு பயோ டெக்னாலஜி மேல் ஆர்வம் வந்தது?
இந்தக் கேள்விகளை, ஏதோ நம் படிப்பு பற்றி அக்கறையுடன் விசாரிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு,
வேற டிப்பார்ட்மெண்ட்டே கிடைக்கலை சார்! 
எலக்ட்ரானிக்ஸ் படிச்சாத்தான் வேலை கிடைக்கும்னு சொன்னாங்க!
எங்க அண்ணன் கம்பெல் பண்ணினான்.
என் க்ளோஸ் ஃப்ரெண்டும் நானும் ஒண்ணாத்தான் கோர்ஸ் தேர்ந்தெடுத்தோம்.
நாங்க தேர்ந்தெடுக்கலை சார். அந்தப் பிராஜக்ட்தான் கரெக்டா ரிசல்ட் வந்தது. மேலும், வேற எதை யோசிச்சாலும், அதை யாராவது செஞ்சிருந்தாங்க!
அந்தக் காலேஜ்தான் எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தது. அல்லது  அந்தக் காலேஜ்தான் சிட்டில இருந்தது.
பயோ டெக்னாலஜி புது டிப்பார்ட்மெண்ட், அதுக்கு நல்ல எதிர்காலம் இருக்குன்னு ஃப்ரெண்டெல்லாம் சொன்னாங்க !
மேற்கண்ட பதில்கள் எல்லாம், இந்த முடிவுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏதோ நடந்தேறிவிட்டது என்று சொல்வதையே பிரதிபலிக்கிறது. இப்படி பதில்சொன்னாலே, நம்ம ஆளுக்கு முடிவெடுக்கத் தெரியாது என்று நிறுவனத்துக்குத் தானாகத் தெரிந்துவிடும்.
ஆக, மேற்கண்ட கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லலாம்.?
பதில்கள் தானாக வரவேண்டும். இருந்தாலும் கீழ்க்கண்ட விபரங்களை மனதில் வைத்துக்கொள்வதுதான் நல்லது!
எலக்ட்ரானிக்ஸ் என்பது அழியாத துறை, அதில் இன்னும் முன்னேற்றங்கள் நடந்துகொண்டே இருக்கிறது. ரேடியோவாக இருந்தாலும் சரி! இனி வரப்போகும் ரோபோக்களாக இருந்தாலும் சரி! எலக்ட்ரானிக்ஸ் என்பது நிரந்தரமாக இருக்கும். மேலும் எனக்கு சிறுவயதில் இருந்தே, எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் மீது மிகவும் ஆர்வம் அதிகம். ஆகவே எனக்குப் பிடித்த, அழியாத துறையை எடுத்தால், என் எதிர்காலம் வளமாக இருக்கும் என்று யோசித்து இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தேன் என்று சொன்னால் போதும்!
நிறுவனம் அசந்துவிடும். உங்கள் முடிவெடுக்கும் திறன் மேல் நம்பிக்கை வந்துவிடும். இதுபோல்தான் நண்பர் பற்றிய கேள்வியும்.! அதில், ஒரு விபரம் அடங்கியிருக்கிறது. நீங்கள் நண்பரைப் பின்பற்றுகிறீர்களா? அல்லது அவர் உங்களைப் பின்பற்றுகிறாரா என்ற விபரமும் வந்துவிடும். ஏனெனில், அவர் உங்களைப் பின்பற்றியிருந்தால், அது நிறுவனத்துக்குப் பிரச்னையே இல்லை. பழக்கத்துக்காகப் படித்தேன் என்று சொல்வதை எந்த நிறுவனமும் ஏற்றுக்கொள்ளாது. ஆகவே இந்தப் பதிலில் இன்னும் கவனம் தேவை!
என்ன பதில் சொல்லலாம் என்று அடுத்த வாரம் பார்ப்போம்.!

No comments: