Blogger Widgets

Total Page visits

Tuesday, June 23, 2015

அத்தியாயம் 14-பொறுப்பு எனும் கலை!

ஒரு நிறுவனம், தனக்கு எந்த நிலையில், எந்தப் பதவியில் ஊழியர்கள் தேவை என்றாலும், அவர்களிடத்தில் அடிப்படையாக பொறுப்புணர்வை எதிர்பார்ப்பார்கள். ஏனெனில், ஒரு நிறுவனத்தின் தலைவரே அனைத்து வேலைகளையும் செய்யமுடியாது என்பதால்தான் ஊழியர்களை நியமிக்கிறார்கள். அவர்களும் எனக்கென்ன என்று இருந்தால், அந்த ஊழியரை நியமித்ததே தனது குற்றமோ என்று நிறுவனம் பொறுப்பாகச் சிந்திக்கத் துவங்கிவிடும்.

ஆக, வேலைக்குத் தேர்ந்தெடுக்கும்போதே, ஓரளவாவது பொறுப்பானவரா என்று பார்ப்பார்கள். அதைச் சோதிக்கும்முன், உண்மையில் பொறுப்பு என்பது எப்படியெல்லாம் வெளிப்படும் என்று புரிந்துகொள்வோம்.

ஒரு செயல் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, அதனை முடிப்பதோ, தீர்வு காண்பதோ – எதுவாக இருந்தாலும் – நான் செய்கிறேன்; இந்த வேலையை முடிப்பது என் பொறுப்பு என்று ஏற்றுக்கொள்ளுதல் முதல் வகை! - உதாரணமாக, பள்ளியில் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும்போது, மாணவர்களை ஒருங்கிணைத்து, பஸ்ஸுக்குத் திரும்ப அழைத்து வருவது உன் பொறுப்பு என்று ஒரு பையனை நியமிப்பார்கள். அவனும் அதனை மனமுவந்து ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினால், அவன் முதல் வகைப் பொறுப்பில் வருகிறான். ‘நான் சொல்றதை பசங்க கேக்கமாட்டாங்க சார். வேற யாரையாவது போடுங்க’ என்று ஒதுங்கும் மாணவன், தானாக தனக்கு வந்த பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறான்.

அடுத்தது, எந்த இடத்துக்குச் சென்றாலும், அந்த இடம் நம்முடையது என்ற சொந்தநிலை உணர்வுடன், அங்கு இருக்கும் தவறுகளையோ, சூழலையோ சரி செய்வதுதான் அடுத்த வகைப் பொறுப்பு! குறைந்தபட்சம், அதைச் சரி செய்யக் கோரிக்கை அல்லது ஆலோசனையாவது முன்வைக்கலாம். இதில், அங்கு இருக்கும் நல்லவற்றைப் பாராட்டுவதும் அடங்கும்! உதாரணமாக, நிறைய திரைப்படங்களில் வந்த காட்சிதான்! கேலண்டரில் சரியான தேதியைக் கிழிப்பது, சிதறிக் கிடக்கும் செய்தித்தாள்களை ஒழுங்குபடுத்துவது, நமக்கு சரி எனப் படுவதை வெட்கப்படாமல் செய்வது, அருகில் இருப்பவர் குப்பை போட்டால், அதனை எடுத்துச்சென்று அதற்கான தொட்டியில் போடுவது, தேவையில்லாமல் ஓடும் மின்விசிறியை நிறுத்துவது என்று இயல்பாகச் செய்தல் இந்தவகைப் பொறுப்பு! ஆனால், இதில் நடித்தால் பத்து நிமிடங்களில் பல் இளித்துவிடும். இயல்பாக மாற்றிக்கொள்ளுதல் நலம். இதனை வீட்டில்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். எனக்கென்ன என்று வீட்டில் இருப்பவர்களை, வெளியில் பொறுப்பானவர்கள் என்று ஒருபோதும் சமூகம் ஏற்றுக்கொள்ளாது. ஏன்? அவர்கள் மனசாட்சியே எதிரில் நின்று கெக்கேபிக்கே என்று சிரிக்கும்.

மூன்றாவது வகைப் பொறுப்புணர்வு என்பது, தவறுகளை ஏற்றுக்கொள்வது. 

இந்தப் பொறுப்புணர்வுதான், இந்தக் காலகட்டத்தில் குடிதண்ணீர்போல மிகவும் அரிதாகிவிட்டது.  ஒரு தவறு நடந்துவிட்டது. ஆமாம். நாம்தான் இதற்குப் பொறுப்பு. என்ன செய்வது என்று ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகருவோம். அதனைச் சரி செய்ய முயலுவோம் என்று எண்ணுபவரை நிறுவனம் ஏற்றுக்கொண்டுவிடும். ஆனால், தான் தவறே செய்யவில்லை, அல்லது அதற்கு நான் பொறுப்பாக முடியாது என்று மொக்கையான லாஜிக்குடன் வாதாடுபவர்களை - அவர்கள் மீதுதான் தவறு என்று – நிரூபிக்கும்வரை நிறுவனமோ, மேலதிகாரியோ ஓயமாட்டார். இதில் சம்பந்தப்பட்ட நபருக்குப் பெரிய பிரச்னையே தடுப்பாட்டம் ஆடுவதே முதல் வேலையாகிவிடும். அதாவது இந்தத் தவறுக்கு தான் பொறுப்பில்லை என்று நிரூபிக்கத்தான் அதிக நேரம் செலவிடுவார். அப்புறம் எங்கே அவர் தீர்வு கண்டுபிடிப்பது? அனைத்து நிறுவனங்களும் இவர்களைத்தான் டேஞ்சர் ஸோனில் கொண்டு நிறுத்தும்.

அப்படியெனில், முதல் இரண்டு வகைப் பொறுப்புகளைவிட, மூன்றாம் வகைப் பொறுப்பைத்தான் நிறுவனம் உற்று நோக்கும். அப்படியெனில், இதனை எப்படிக் கண்டறிவார்கள்? ஏனெனில், முதல் இரண்டு பொறுப்புணர்வாவது ஏதாவது ஒரு செயலில் வெளிப்பட்டுவிடும். 

இதற்குத்தான் நிறுவனங்கள் சந்தேகம் வராத, இயல்பான கேள்விகளை வீசுவார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு நிறுவனத்துக்கு, ஒரு பொறுப்பான வேலைக்கு விண்ணப்பித்து, ஒரு இளைஞன் நேர்முகத் தேர்வுக்கு வந்தான். அப்போது, நானும் அந்த நிறுவன அதிபருடன் உடன் இருந்தேன். 
 
அவனது பொறியியல் படிப்பின் 3-வது மற்றும் 4-வது செமஸ்டர் மதிப்பெண்கள் மிகவும் குறைந்திருந்தது. (பொதுவாகவே கொஞ்சம் பொறுப்புக் குறைவான மாணவர்கள், பொறியியல் பட்டத்தின் இரண்டாம் ஆண்டில் கொஞ்சம் ஜாலியாக இருந்துவிடுவார்கள். பிறகு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து, விட்டதைப் பிடிக்கலாம் என்ற எண்ணம்) அதைக் குறிப்பிட்டு அவர் கேட்டார்.

‘ஏன் இந்த ரெண்டு செமஸ்டர் மட்டும் மார்க் குறைஞ்சிருக்கு?’

‘மூணாவது செமஸ்டர் எக்ஸாம் அப்ப எங்க அக்காவுக்கு மேரேஜ் சார். அந்த வேலையா சுத்தவேண்டியதாயிடுச்சு! அதுல கொஞ்சம் படிக்கிறதுல கவனம் செலுத்த முடியலை சார்! எங்க அப்பாகிட்ட தலைதலையா அடிச்சுக்கிட்டேன். ரெண்டுமாசம் கழிச்சு கல்யாணம் வச்சுக்குங்கன்னு. கேக்கவே இல்லை. இப்போ அது ஒரு பெரிய இஷ்யூவா எனக்கு முன்னாடி நிக்கிது’ என்றான்.

‘ஓ… அப்படியா? அப்போ 4-வது செமஸ்டர்…?’  

‘அக்கா பிரக்னென்ட்டாயிட்டாங்க சார்! அவங்களை ஹாஸ்பிட்டல் கூட்டிக்கிட்டுப்போறது, கொண்டுவந்து விடறதுன்னே நேரம் போச்சு சார். சுத்தமாப் படிக்க முடியலை’ என்று லாஜிக் மீறாமல் காரணம் சொன்னான்.

ஆனால், ஒரு விவரத்தை நாங்கள் கவனிக்கவில்லை என்று நினைத்துவிட்டான். அந்த மாணவனின் ஊர் கோவில்பட்டி. அவன் கல்லூரி தஞ்சாவூரில்.

அதில்கூட சில லாஜிக் இருக்க வாய்ப்பிருந்ததால், அவர் என்னைப் பார்த்தார். என்னைப் பொறுத்தவரை, அவன் ‘இல்லை சார்! கொஞ்சம் மெத்தனமா இருந்துட்டேன்’ என்று சொல்லியிருந்தால், அவனை ஏற்றுக்கொண்டிருக்கலாம் என்று பட்டது. ஆகவே நான் ஒரே ஒரு அஸ்திரத்தை வீசினேன்.

‘You are appointed Mr……. உங்க அக்கா கல்யாண பத்திரிகையையும், ஆல்பத்தையும், உங்க அக்கா குழந்தையின் பர்த் சர்டிஃபிகேட்டையும் நிறுவனத்தில் காட்டிட்டு ஜாயின் பண்ணிக்குங்க!’

இன்றுவரை அந்த இளைஞன் திரும்ப வந்ததாகத் தெரியவில்லை.

No comments: