Blogger Widgets

Total Page visits

Friday, August 8, 2014

ஃபிளிப்கார்ட்:4 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 42,000 கோடி ரூபாய்

சிறிய மளிகைக் கடைக்காரர்கள் சூப்பர் மார்க்கெட்களைப் பார்த்து பயந்தார்கள். பின்னர் கார்ப்பரேட் கம்பெனிகள் வந்தன. சமீபத்தில் எஃப்டிஐ, அதாங்க சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு. அதைப் பார்த்துப் பயந்தார்கள். இப்போது அனைவரும் ஆன்லைன் வணிக நிறுவனங்களைப் பார்த்துப் பயப்படும் அளவுக்கு ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்திருக்கிறது.

புத்தகங்கள், மளிகை, ஜூவல்லரி, ஆடைகள், காலணி, மொபைல் என அனைத்தையும் ஆன்லைனில் வாங்கத் தொடங்கியுள்ளார்கள். இதனால் எல்லா வணிக நிறுவனங்களும் இணையம் மூலம் பொருள்களை விற்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதற்கு முன்னோடியாக அமேசான் (அமெரிக்கா), அலிபாபா (சீனா) உள்ளிட்ட பல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தியாவில் ஃபிளிப்கார்ட்டைச் சொல்லலாம்.

ஆரம்பம்

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகிய இருவரும் 2007-ம் ஆண்டு ஆரம்பித்தார்கள். இருவரும் டெல்லி ஐஐடியில் படித்தார்கள். அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்தார்கள். பின்னர் வெளியேறி 4 லட்ச ரூபாய் முதலீட்டில் பிளிப்கார்ட்டைத் தொடங்கினார்கள்.
ஆரம்பத்தில் புத்தங்களை மட்டுமே விற்று வந்தார்கள். ஹைதராபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் leaving microsoft to change the world என்னும் புத்தகத்தை முதன்முதலில் வாங்கியுள்ளார்.

பிஸினஸ் செய்வதற்கு முதலீடு தேவை இல்லை, ஐடியா மட்டுமே போதும் என்பதற்கு இவர்கள் சரியான உதாரணம். இவர்களது ஐடியாவைப் பார்த்து வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் இவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்ய தயாராக இருக்கின்றன. முதல் 18 மாதங்களுக்குத் தங்களுக்கான சம்பளத்தை இவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை.

கிரெட் கார்ட் அல்லது டெபிட் கார்டு வைத்திருப்பர்கள் மட்டுமே ஆன்லைன் பொருள்களை வாங்க முடியும் என்பது தடையாக இருந்துவந்தது. அதனால் கேஷ் ஆன் டெலிவரி திட்டத்தை 2010-ம் ஆண்டு கொண்டுவந்தார்கள். பொருளை ஆர்டர் செய்துவிட்டுத் தேவை இல்லை என்று சொல்லலாம், வீடு பூட்டியிருக்கலாம் எனப் பல ரிஸ்க் இருந்தாலும் பன்சால் ஜோடி துணிந்தது. இது நிறுவனத்துக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தது.

முதலீடு திரட்டல்

பிஸினஸ் வளர்வதற்கு வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களிடம் பேசி நிதி திரட்டினார்கள். 2009-ம் ஆண்டு 10 லட்சம் டாலர் முதலீட்டை ஆக்செல் பார்ட்னர் நிறுவனம் பிளிப்கார்டில் முதலீடு செய்தது. தவிர டைகர் குளோபல், நாஸ்பர், மார்கன் ஸ்டேன்லி உள்ளிட்ட பல நிறுவனங்கள் பிளிப்கார்டில் முதலீடு செய்திருக்கின்றன.

கடந்த ஏழு வருடங்களில் 176 கோடி டாலர் அளவுக்கு ஃபிளிப்கார்டில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. உலகளவில் அதிகளவு முதலீட்டை திரட்டிய இந்திய நிறுவனம் பிளிப்கார்ட்தான்.

வளர்ச்சி

திரட்டிய முதலீட்டை பிஸினஸில் முதலீடு செய்வது ஒரு வகையான வளர்ச்சி என்றால், நிறுவனங்களைக் கையகப்படுத்தி வளர்வதும் இன்னொரு வகையான வளர்ச்சி. இன் ஆர்கானிக் குரோத் என்பார்கள். ஃபிளிப்கார்ட் இந்த வேலையையும் செய்து வருகிறது.

மிக சமீபத்தில் 2,000 கோடி ரூபாய் கொடுத்து மிந்த்ரா டாட் காம் Myntra.com நிறுவனத்தை வாங்கியது.

2012-ம் ஆண்டு லெட்ஸ்பை (Letsbuy.com) என்னும் நிறுவனத்தை வாங்கியது. இது தவிர இன்னும் சில நிறுவனங்களையும் ஃபிளிப்கார்ட் வாங்க இருக்கிறது.

இப்போது ஃபிளிப்கார்ட்டில் மட்டுமே கிடைக்கும் என்று விளம்பரப்படுத்திப் பொருள்களை விற்க ஆரம்பித்திருக்கிறது. இப்படி விற்பதால் அதிக அளவு தள்ளுபடி கொடுக்க முடிவதால் மோட்டோ நிறுவன செல்போன்களை ஃபிளிப்கார்ட்டில் வாங்க கூட்டம் அலைமோதியது. சமீபத்தில் சீனாவின் Xiaomi Mi3 செல்போன் சில வினாடிகளில் விற்றுத் தீர்ந்தது. இதை அறிமுகப்படுத்திய அன்று ஃபிளிப்கார்ட் இணையதளம் கொஞ்சம் ஆடித்தான் போனது.

6000 கோடி ரூபாய் (2013-14) அளவுக்கு வருமானம் இருந்தாலும் ஃபிளிப்கார்ட் இன்னும் லாப பாதைக்குத் திரும்பவில்லை. இது குறித்து கேட்டதற்கு, “லாபம் ஒரு விஷயமே இல்லை. என்றைக்கு விரிவாக்கப் பணிகளை நிறுத்துகிறோமோ அப்போதே லாப பாதைக்குத் திரும்பிவிடலாம். ஆனால் செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது” என்கிறார் அதன் தலைமைச் செயல் அதிகாரி சச்சின் பன்சால்.

4 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 42,000 கோடி
ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

15 கோடிக்கும் மேலானவர்கள் இணையத்தைப் பயன்படுத்தினாலும், இதில் 10 சதவீதம் நபர்கள்தான் ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்குகிறார்கள். ஆன்லைன் வணிகம் 2020-ம் ஆண்டு 7,000 கோடி டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டையும் வைத்துப் பார்க்கும் போது 2020-ல் ஃபிளிப்கார்ட் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும், லாப பாதையில் திரும்பி இருக்கும். சிறந்த தொழில்முனைவோராக உயர்வது எப்படி இருப்பது என்று ஐஐஎம் கல்லூரிகளில் சிறப்பு வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கலாம்.
ஆனால்...

ஃபிளிப்கார்ட் யாரும் செய்யாததைச் செய்யவில்லை. பல வருடங்களுக்கு முன்பு ஆன்லைன் வணிகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. பிளிப்கார்ட் ஒரு எர்லி பேர்டு. அது மட்டுமல்லாமல் சரியான சமயத்தில் வந்த பேர்டும்கூட.

தகவல்: தி ஹிந்து  

No comments: