ம
னிதனுக்குத் தொழில்நுட்பம் அறிமுகமானதும் முதலில் களவாடப்பட்டது நம் தூக்கத்தைத்தான். இரவானவுடன் ஓய்வைத் தொடங்கிய ஆதிகால மனிதன், தூக்கத்தை இழந்தது நெருப்பைக் கண்டுபிடித்த பிறகுதான்.
தொலைக்காட்சி வருவதற்கு முன், தினமும் ஒருவர் 8 மணி நேரம்வரை கண்டிப்பாகத் தூங்க வேண்டும் என்று சொல்லி வந்த டாக்டர்களின் வாயை மூடிவிட்டன பெருநிறுவனங்கள். இன்று 6 மணி நேரம் தூங்கினாலே போதும் என்கிறார்கள். ஆனால் அதையும் நம் குழந்தைகளிடமிருந்து பிரித்துவிட்டது ஸ்மார்ட்போன்.
சிதையும் தகவல்கள்
உடலுக்கும் மூளைக்கும் தூக்கம் அவசியமானது. தூங்கும் நேரத்தில்தான் நம் உடல் உறுப்புகள் தம்மைச் சீர்செய்துகொள்கின்றன. மூளை, தான் பெற்ற அனைத்துத் தகவல்களையும் ஒருங்கிணைக்கிறது. போதுமான தூக்கம் இல்லை என்றால், உடலுக்கும் ஓய்வில்லை, தகவல்களும் கலைந்துவிடுகின்றன. போதுமான தூக்கமின்மை பல துணைநோய்களை உடலுக்குப் பரிசளிக்கிறது.
அதிக எடையுடன் இருப்பவர்கள், கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள். தங்கள் கலோரிகளை எரிப்பார்கள். ஆனால் 6 மணி நேரம் தொந்தரவில்லாமல் தூங்கினால் உடலே சுமார் 1,000 கலோரிகளை எரித்துவிடுகிறது. சரியான தூக்கமே உடல் எடை அதிகரிப்பை நிறுத்துகிறது.
ஒழுங்கற்ற தூக்கம்
ஆனால் போதுமான தூக்கம் இல்லை என்றால், உங்கள் உடல் சோர்வடைகிறது. மனச் சோர்வு ஏற்படுகிறது. எரிச்சல், கவனமின்மை, அதீத கோபம், பொறுமையின்மை எனப் பல துணைப் பிரச்சினைகளைத் தூக்கமின்மை கொண்டுவருகிறது.
உண்மையில் வீடியோ கேம் விளையாடுவதால் ஒருவர் தூங்குவதே இல்லை என்று சொல்லிவிட முடியாது. மூளை அப்படி வேலை செய்ய முடியாது. முதலாவதாக தூக்கம் ஒழுங்கற்றுப் போகும். முதல் 24 மணி நேரம்வரை ஓய்வு கொடுக்காமல், அடுத்த நாளின் நேரத்தைக் கடன் வாங்கி அதிகமாகத் தூங்குவார்கள். படுக்கைக்குச் செல்லும் நேரமும் ஒழுங்காக இருக்காது. இரவில் தூங்குவதற்குப் பதில் பகலில் தூங்குவார்கள். கால் நீட்டி வசதியாகப் படுக்காமல், கணினி முன் இருக்கும் இருக்கையில் அமர்ந்தபடி தூங்குவார்கள்.
இவை எதுவுமே சரியான தூங்கும் முறை கிடையாது. போதுமான தூக்கம் இல்லாமல் பள்ளியில் கற்க முடியாது. உடலை வளைத்து விளையாடவும் முடியாது. புதிதாக எதையும் சாதிக்கவும் முடியாது.
தூண்டுதலுக்கு மட்டுமே கவனம்
வீடியோ கேம் ஆடுவதால் குழந்தைகளின் கவனம் சிதறுகிறது என்று நான் பொய் சொல்லப் போவதில்லை ஆனால் மிக முக்கியமான சில பாதிப்புகள் இருக்கின்றன.
வீடியோ கேம் விளையாடும்போது, அது விளையாடுபவர்களின் கவனத்தை நன்றாகக் குவிக்க உதவுகிறது. அப்போதுதான் அவர்களால் பாயிண்ட் எடுக்க முடியும். என்றாலும் இதில் பிரச்சினை இல்லாமல் இல்லை.
அதிகமாக வீடியோ கேம் விளையாடுபவர்களால் குறிப்பிட்ட சில தூண்டுதல்களுக்கு மட்டும்தான் கவனம் குவிக்க முடிகிறது. சுற்றுப்புறத்தில் எந்த சுவாரசியமோ, கண்னை வசீகரிக்கும் வண்ணங்களோ இல்லை என்றால் அவர்களின் கவனம் குவிவது கடினமாகிவிடுகிறது.
விளையாட்டில் மட்டுமே கவனம்
வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளை ஆய்வுசெய்து பார்த்ததில் மிகவும் கலவையான முடிவுகளே கிடைத்தன. சாதாரணமாக வீடியோ கேம் விளையாடும் குழந்தைகள் சில செயல்களில் கவனத்தை குவிப்பது கடினமாக இருந்தது. அதேநேரம், அதீதமாக வீடியோ கேம் விளையாடும் சிறுவர்கள், அந்தக் குறிப்பிட்ட செயலில், அதாவது வீடியோ கேம் விளையாட்டில் மட்டுமே கவனத்தைக் குவிக்க முடிந்தது.
மற்றொருபுறம், குறைவான நேரம் வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளால் பல சாதாரணச் செயல்களில் எளிதாகக் கவனத்தைக் குவிக்க முடிந்தது. ஆனால், அதீதமாக விளையாடுபவர்களால் அவற்றில் கவனத்தை நிலைநிறுத்த முடியவில்லை.
click here for original article
No comments:
Post a Comment