Blogger Widgets

Total Page visits

Sunday, March 5, 2017

அதிகரிக்கும் தற்கொலைகள்... காரணமாகும் மனஅழுத்தம்... விரட்டியடிக்கும் திறவுகோல் எது? #MustRead

‘நான் பயங்கர டென்ஷன்ல இருக்கேம்ப்பா...’ (Yes I’m Stressed...) இந்த வாசகத்தை உபயோகிக்காதவர்கள் எவரும் இல்லை. அவ்வளவு ஏன்... குழந்தைகள்கூட சர்வ சாதாரணமாகச் சொல்லக்கூடிய வாசகமாகிவிட்டது இது! 
மனஅழுத்தம்
அதீத உழைப்பும் ஆபத்தே!
‘அதிகமாக வேலை பார்த்தால் டென்ஷன் குறையும்’ (Less Tension More Work) என்ற வாசகம்கூட உற்பத்தித்திறனை (Productivity) மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கும் எனத் தோன்றுகிறது. இந்த நூற்றாண்டில்தான் `டென்ஷன்’ என்ற வார்த்தை மிக இயல்பாக புழங்கிக்கொண்டிருக்கிறது. அதாவது உலகமயமாக்கல், குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை. 
ஒரே கலாசாரம், கல்வி முறையில் இருப்பவர்களுக்குள் நிகழ்ந்த போட்டியைவிட உலகமயமாக்கலுக்குப் பின்னர் பூமத்திய ரேகை தாண்டியும் போட்டியிடவேண்டிய அவசியத்தை நாம் உருவாக்கிக்கொண்டோம். இதில் வெவ்வேறு நேர மண்டலங்களையும் (Time Zone) இருக்கும் 24 மணி நேரத்துக்குள் அடக்கிக்கொள்ளும் எல்லையற்ற சுதந்திரம் வளர்ச்சிதான் என்றாலும், ஏதோ ஒரு கட்டத்தில் அந்த முன்னேற்றத்தை வரைமுறைப்படுத்தவும், `போதும்’ என நிறுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்படாமலேயே வாழ்கிறோம். சிறு வயதில் சைக்கிள் ஓட்ட ஆசைப்படும் காலத்தில், எப்படியோ பெடலில் கால் வைத்து ஏறி மிதிப்போம், வானத்தில் பறப்பதுபோல இருக்கும். நாம் பெரியவர்களாகிவிட்டோம் என்கிற நினைப்பும் கூடவே ஓடும். ஆனால், சில அடிகள் நகர்ந்து போனதும், எப்படி இறங்குவது எனத் தெரியாமல் விழிப்போம். அதைப்போன்றே இன்றைய வாழ்க்கைச் சூழலும் அமைந்துவிட்டது. `சூரியன் உதிப்பதற்கு முன்னர் எழு! அஸ்தமனத்துக்குள் வேலைகளை முடித்துக்கொள்! நிலவொளியில் தூங்கு!’ என்பதெல்லாம் மாறிப் போக, இயற்கைக்கு எதிர்த்திசையில்... சொல்லப்போனால் எதிரி திசையிலேயே பயணித்துக்கொண்டிருக்கிறோம். 
தத்துவவாதியும், மானுடவியலாளருமான ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர் (Herbert Spencer) முதன்முறையாக உதிர்த்த தத்துவம்தான் `வலுவுள்ளவனே வாழத் தகுந்தவன்’ (Survival of the fittest) எனும் பரிணாமக் கொள்கை. அது இன்று ஆழ்மனதில், நம் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளின் ஒவ்வொரு செயலிலும் தெரிகிறது. இதில் உடலும் மனமும் சதா உழைப்பதற்காகவே ஆயத்தப்படுத்தப்படுகிறது. இங்கு இளைப்பாறுவதற்கான காலங்கள்கூட சோம்பல் என்ற வகையில் முகம் சுளிப்புக்குள்ளாவதை பலரும் உணர்ந்திருப்போம். `உடல் சோர்வாக இருக்கிறது; ஓய்வெடுக்கலாம்’ என நினைத்தால், எத்தனை பேரால் அதை நிகழ்த்திக்கொள்ள முடியும்? பெரும்பாலானவர்களால் நிச்சயம் முடியாது. காரணம், ஒவ்வொரு மணித் துளிகளையும் கணக்கிட்டு செலவழித்துக்கொண்டிருக்கும் நாம், உண்மையில் பயணிப்பதை விரும்பத் தொடங்கி, இறுதியில் வேகத் தடைகளையும் மதிக்காமல் பிரேக் இல்லாத வண்டிபோல எங்கேயாவது முட்டி நிற்கும்வரை ஓடிக்கொண்டிருக்க முனைகிறோம். அது பெரும்பாலும் இயல்பான நிறுத்தமாக இல்லாமல், ஆக்ஸிடன்ட்டாகவே முடிந்து போகிறது என்பதுதான் சோகம். 
மனஅழுத்தம்
ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம், பத்து மாதத்துக்கு மேலாகியும் ஓரிரு வாரங்கள் கூடுதலாக வயிற்றில் பிள்ளையைச் சுமந்த தாய்மார்களைப் பற்றிக் கேட்டிருப்போம் இப்போதெல்லாம் டாக்டரின் இருப்பையும், பேறுகால விடுமுறையை கணக்கில் வைத்தும் அறுவைசிகிச்சைக்கான தேதி குறிக்கப்படுகிறது. இதில் தனி மனிதர்கள் மீது தவறு எனச் சொல்வதற்கில்லை. அவசரம் இல்லாத மனிதர்கள், வளர்ச்சியின் பாதையில் புறக்கணிக்கப்படுவதாக ஒரு கூற்றும் உண்டு. எனவே, ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானே ரோபோவைப்போல வடிவமைத்துக்கொள்கிறோம் இதில் நாமாக நமக்கு வைத்துக்கொள்ளும் டார்கெட்தான் ஆபத்தை வரவேற்கச் செய்யும் முதல் செயல்பாடு.
உடலும் மனமும் ஒருங்கிணைக்கப்படாத இடத்தில் நோய்கள் சூழும்!
உடல் களைத்துப் போய் இருந்தாலும், உடல்மொழியையும் மனச்சோர்வையும் நாம் குரல் கொடுத்துக் கேட்பதில்லை. கேட்கப்படாத மனதின் இந்தக் குமுறல்தான் இன்று பெண்கள் மத்தியில் மிக அதிகமாக இருக்கிறது; இள வயதுப் பிள்ளைகளையும் தொடர்கிறது. இதுதான் பின்னாளில் உயிரை வாங்கும் தற்கொலையைத் தூண்டும் மனஅழுத்த நோயாகவும் மாறிவிடுகிறது. 
மனஅழுத்தம் என்பது ஒரே நாளில் நிகழ்ந்துவிடுகின்றதா என்றால், அது மிக மிக அரிது என்று சொல்லலாம். அப்படியென்றால், மனஅழுத்தம் எப்படி அவதரிக்கிறது... இது அனைவருக்கும் வருமா? எனக் கேட்டால், மரபணுரீதியில் சிலருக்கும், வாழ்வியல் முறை நோய்கள் (Lifestyle Diseases) வழியில் பலருக்கும் இது நிகழும். 
குறிக்கோள்களை குறிபார்க்கும் மனஅழுத்தம்
குறிக்கோள் (Ambition - Aim) இதுதான் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதற்கான அடையாளம். இறுக்கமாக பின்னப்பட்ட வீணைக் கம்பிகளில் முன்னும் பின்னுமாக மீட்டப்படும் மெல்லிசையைப்போல, ஒவ்வொரு செயலையும் ஆனந்தமாக விரைந்து செய்ய, மனிதனுக்காக இயற்கை கொடுத்த செயலியாகத்தான் குறிக்கோள்களை நான் கருதுகிறேன். ஒருவேளை, குறிக்கோள் எனும் இந்தச் செயலி இல்லாமல் போனால், மனிதர்கள் எல்லோரும் ஏதுமற்ற ஏகாந்த நிலையில் தேவைகள் தேவைப்படாமல் வாழ்ந்துகொண்டிருக்கலாம். இன்று இந்த அறிவியலும், மனித வாழ்வியல் வளர்ச்சிகளும் ஏன் மனிதனின் பரிணாம வளர்ச்சியும்கூட திசைமாறியிருக்கலாம். மனிதனை இயக்கும் குறிக்கோள் எனும் இந்தச் செயலியின் மேனுவல் (Manual) மனிதனால்தான் உருவாக்கப்படுகிறது என்றாலும், முன்னர் குறிப்பிட்டதுபோல வீணைக் கம்பியின் லாகவமான இறுக்க அளவில் குறிக்கோள்களைக் கையாளும்வரை இந்தச் செயலி பிரச்னையின்றி செயல்பட முற்படும். எப்போது இதன் இறுக்கம் அதிகமாகி, எதிர்பார்ப்பு எனும் அழுத்தம் கூடுகிறதோ, அப்போதே உடலும் மனமும் ஓய்வுக்கான அறிகுறியாக, தவறு (Error) காட்ட முற்பட்டுவிடும். மனநலக் காப்பாளர், ரமா இன்பா சுப்ரமணியத்தின் ஒரு வாசகத்தை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்... `மன அழுத்தத்தின் நுழைவாயில் டென்ஷன்’ (Tension is the Gateway of Stress). இந்தத் தவறுதான் மனதில் அழுத்தத்தை உருவாக்கி, `டென்ஷன்தானே..!’ என நாம் ஒதுக்கும் உணர்வை, ஸ்ட்ரெஸ் ஆக உருவாக்குகிறது. 
தற்கொலை
பாபுவுக்கு 12 வயது. ஐந்து வயதிலிருந்தே சங்கீதம்தான் அவன் இலக்கு. வசதி குறைவு மற்றும் சுற்றுப்புறச்சூழலால் வீட்டுக்கு அருகிலேயே கிடைத்த ஒரு குருவை ஏற்று, சங்கீதம் கற்றான். இருந்தாலும், தேர்ந்த குருவிடம் சங்கீதம் கற்க பணமும் வாய்ப்பும் கிடைக்கவில்லையே எனச் சஞ்சலப்படவும் தொடங்கினான். ஆரம்பத்தில் வீட்டில் அவனுடைய சங்கீத ஆர்வத்துக்கு மறுப்புதான் பதிலாகக் கிடைத்தது. பக்கத்து வீட்டு சங்கரைப்போல கம்ப்யூட்டர், கராத்தே ஆகியவற்றில் சேர்க்கவே வீட்டார் விரும்பினார்கள். பிறகு, வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்கள். ஓரிரு கோயில்களில் அவன் இறை வாழ்த்துப் பாடியதும் கிடைத்த கைதட்டல்களும் வாழ்த்துக்களும் அவனை மெய்சிலிர்க்கச் செய்தன. `மற்றவர்போல நாம் இல்லை’ என்ற உணர்வும், இதை அப்படியே தக்கவைத்துக்கொள்ளவேண்டிய எண்ணமும் வந்தது. உடன் இருந்தவர்கள், `ஆஹா... `பாட்டு போட்டி’ல கலக்கிடுவடா பாபு’ எனச் சொன்னதும் இன்னமும் பிரஷர் ஏற ஆரம்பித்தது. இனி சரியாகப் பாடவில்லை (Perform செய்யவில்லை) என்றால் மானம் போகும் என்பதை மெள்ள மெள்ள உணர ஆரம்பித்திருந்தான் பாபு. 
அடுத்து நடந்த ஒரு பள்ளிப் போட்டியில் பாபு தோல்வி அடைந்தான். மேலும் ஓரிரு போட்டிகளிலும் அதே நிலை. `சரி சங்கீதத்தை விட்டுவிடலாம்’ என்றால், நெருங்கியவர்களும் உடன் இருப்பவர்களும் அவன் மீது வைதிருந்த நம்பிக்கையும், `இவ்வளவு காசு செலவு பண்ணியிருக்கேன்... ஆரம்பத்துலயே சொன்னேன் கேட்டியா? நீ வேஸ்டு...’ என இவனைப் புரிந்துகொள்ளாத குடும்பச் சூழலும் நிலவுகின்றன. இந்த நிலையில், குறிக்கோள் குப்புறச் சாய்ப்பதும் சாத்தியமே. தன்நம்பிக்கை வழியும், முயற்சியின் வழியும் இயல்பாக நிகழவேண்டிய செயல், அழுத்தம் காரணமாக நிகழ்த்தியே ஆகவேண்டும் என்ற பரபரப்பை உண்டாக்குகிறது. இது நம்மாலும் நம்மைச் சார்ந்தவர்களாலும் போட்டிகள் நிறைந்த இவ்வுலகத்தாலும்தான் உருவாக்கப்படுகிறது.
மனஅழுத்தம் (Stress) ஒரு நோய் அல்ல!
குடும்பத்தாரின் நேர்மறையான அணுகுமுறை (Positive Approach), ஊக்கம் இவை கிடைத்தால் நிச்சயம் மனஅழுத்தம் என்பது, எளிதில் களையக்கூடிய ஒன்று. ஆனால், அந்த ஆறுதல் கிடைக்காத பட்சத்தில் ஏமாற்றத்தால் மனமுடைந்து தூக்கமிழப்பதும், உணவில் கவனம் செலுத்தாமல் இருப்பதும், போதுமான அளவுக்குத் தண்ணீர் அருந்தாத நிலையும் களைப்புக்கு உள்ளாகவைக்கும். பின்னர் அதுவே இயலாமையை அதிகப்படுத்தி, நம்பிக்கையின்மையும் உண்டாக்கும். ஒரு கட்டத்தில் தனக்கு யாருமில்லை என்ற ஆதரவற்ற நிலையில் ஏற்படும் சுயபச்சாதாபத்தையும் உருவாக்கிவிடும். இப்படி குடும்பத்தில் புரிதல் கிடைக்காமல், குறிக்கோள்களில் தோல்விகளைச் சந்திக்கும்போது இயற்கையின் எச்சரிக்கை மணியை மதிக்காமல் மனச்சோர்வுடன் டார்கெட்டை நோக்கி ஓடுபவர்களை மனஅழுத்தம் அதன் அடுத்த கட்ட தாக்குதலான `மனச்சிதைவு’ எனும் நிலைக்குத் தள்ளிவிடுகிறது. 
அப்படி என்னதான் உடலில் நிகழ்ந்துவிடும்?
உணர்வுச் சமநிலையின் (Emotional Balance) ஒரு பகுதியாக இது பார்க்கப்பட்டாலும், உடலில் அப்படி என்னதான் நிகழ்ந்துவிடுகிறது என யோசித்தால், `மூளையின் நியூரோட்ரான்ஸ்மிட்டரில் நிகழும் மாறுதல்கள்தான் மனஅழுத்தத்தை உருவாக்குகிறது’ என்கிறார்கள் வல்லுநர்கள். பல வேதிப் பொருட்களைத் தாங்கிய நம் மூளைப் பகுதியில், சில வேதிப் பொருட்கள் நம் வேகத்தைக் கூட்டவும், சில நம்மை அமைதிப்படுத்தவும் பயன்படுகின்றன. இதில் நிகழும் மாறுதல்கள்தான் மனஅழுத்தம்.
உடல் பாதிப்பு
எப்படித் தெரியும்?
‘ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி வெளிப்படும் என்றாலும், படுத்தால் தூக்கம் வரவில்லை, எப்போதும் சாப்பிட்டுக்கொண்டிருப்பது அல்லது பசியில்லாமல் இருப்பது, ஒபிசிட்டி, தனக்கென யாரும் இல்லை எனும் சுயபச்சாதாபம், உதவி கோருவதில் இறுக்கம், மனநிலை ஊசலாட்டம் (Mood Swing), களவு, குற்றஉணர்வு, மிக முக்கியமாக தற்கொலை முயற்சிகள் நிகழ்வது இந்த மனஅழுத்தத்தின் வெளிப்பாடே' என்கிறார்கள் மருத்துவர்கள். 
உலக சர்வே என்ன சொல்கிறது?  
உலக சுகாதார நிறுவனம் 2015–ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையின்படி, `உலக அளவில் 15 – 29 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிக மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் மனஅழுத்ததில் உழல்கிறார்கள்.’  
குறிப்பாகப் பெண்கள் ஏன்?
பெண்களைக் குறிப்பிடுவதற்கான முக்கியக் காரணம், அவர்கள் உடம்பில் இருக்கும் ஹார்மோன்களின் வடிமைப்புகள்தான் இதில் பெரும் பங்காற்றுகின்றன. ஆண்களின் உடம்பைவிட பல்வேறு வேதியல் மாற்றங்களுக்கு மிக எளிதாக மாறவேண்டிய நிலையில் இருக்கும் பெண்களின் உடலும் மனமும் அதிக ஓய்வு தேவைப்படுபவை. எனவேதான், `நாளொன்றுக்கு ஆண்களுக்கு 6 மணி நேரத் தூக்கமும், பெண்களுக்கு 8 மணி நேரத் தூக்கமும் அவசியம்’ என அறிவியலாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இளைப்பாறுங்கள்!
வளர்ச்சி மற்றும் குறிக்கோள்கள் மிக அவசியமானவை. என்றாலும், அவற்றின் அளவுகோலை நம் உடல் சூழல் மற்றும் மன திடத்துக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள வேண்டும். 
`போட்டிகள் நிறைந்த உலகம்’ எனச் சொல்லிக்கொண்டு, குறிக்கோள் எனும் செயலியை அடுத்தவரின் தகுதியை வைத்து நம் இலக்கை நிர்ணயிக்க வேண்டாம். இது பெரும்பாலும் பேரன்ட்டல் கைடுலைனில் கொடுக்கப்படும் அறிவுரைதான் என்றாலும், நம் அனைவருக்குமே இது பொருந்தும் . 
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு என உணர்ந்து, அதன் வழி நம் குறிக்கோள்களைத் திட்டமிடுவோம். குறிக்கோள்கள், பல சமயங்களில் சுற்றுச்சூழலாலும், பால்யத்தின் பதிவுகளாலும் உருவாக்கப்பட்டிருக்கலாம். எனவே, குறிக்கோள்களை அடைய மனஅழுத்தம் இன்றி தன்னம்பிக்கையோடு முனையுங்கள். இலக்கு எட்டப்படவில்லை என்றாலும், வாழ்க்கை முடிந்துவிடப் போவதில்லை. வாழ்க்கையின் ஓட்டத்தில் குறிக்கோள்களும் நம் தேவைகளுக்கு ஏற்ப மறுபரிசீலனைக்கு உட்பட்டவையே. 
மனமும் உடலும் நோயின்றி இருக்க வாழ்க்கை ஓட்டத்துக்கு இடையே இளைப்பாறுங்கள். அதுதான் மனஅழுத்ததை விரட்டியடிக்கும் ஆரோக்கியத்தின் திறவுகோல். 
மனநல ஆலோசனை
மனநல ஆலோசனை மிக அவசியம்!
வெற்றியில் உடன் இருக்க அவசியமில்லை; தோல்வி என்றால், தோள் கொடுத்தால் போதும். மனநல ஆலோசகரின் உதவியுடன் எளிதில் இயல்பு நிலைக்கு மாறிவிடலாம். டென்ஷன், மனஅழுத்தம் இவற்றைக் குடும்ப உறுப்பினர்கள் நினைத்தால் எளிதில் சரிசெய்துவிடலாம். பாதிக்கப்பட்டவர் பேசும்போது `உம்...’ கொட்டும் குணத்தை மட்டும் கையாளுங்கள். அவர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல், விட்டுக் கொடுத்து முதுகை வருடிவிடுங்கள். அது அவர்களின் குறிக்கோள்களை மீண்டும் தட்டியெழுப்பி, சாதிக்கவும் உதவலாம். மன அயர்ச்சியில் இருக்கும் எவரைச் சந்தித்தாலும் அன்புடன் அணுகுங்கள். மனநல ஆலோசகரிடம் செல்பவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்களாகப் பார்க்கப்படும் மனத்தடையெல்லாம் மாறிவிட்டன. அலுவலகம், பள்ளி, மருத்துவமனை... என எல்லா இடங்களில் இன்று கவுன்சலிங் வெகு எளிதில் கிடைக்கிறது. பல ஐடி கம்பெனிகளில் `ஸ்ட்ரெஸ் பால்’ (Stress Ball) வழங்குவதுபோல மனஅழுத்த ஆலோசனைகளும் சர்வ சாதாரணமாக நிகழ ஆரம்பித்துவிட்டன. 
வருமுன் காப்போம்! (Prevention is better than cure) 
மனஅழுத்தத்தோடு இருப்பதாக உணரும்போதே மனநல ஆலோசகரை அணுகி, அதற்கான வாழ்வியல் மாற்றங்களைக் கையாளுங்கள். தற்கொலை எண்ணங்கள் நிகழாமல் ஆரோக்கியமாக வாழ இது மிக அவசியம். 

வாழ்க்கை சுமைதாங்கி மட்டும் அல்ல; அது இளைப்பாறவும் தகுதியான இடமே. எனவே, வாழ்க்கையை நம் மனநிலைக்கு ஏற்ப பழக்கப்படுத்திக்கொள்வோம். வருமுன் காப்போம்!
  
- மதுமிதா



விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

No comments: