Blogger Widgets

Total Page visits

Wednesday, May 21, 2014

சிந்திக்க வேண்டிய தருணம்

ஒவ்வொரு பள்ளியிலும் கல்வியாண்டின் தொடக்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்களிடம் கேட்கும் ஒரு பொதுவான கேள்வி "நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய்?' என்பது. இதற்கு ஒவ்வொரு மாணவனும் மருத்துவர், ஆட்சியர், போலீஸ், ஆசிரியர், விஞ்ஞானி என விதவிதமாக பதில் கூறுவார்கள்.
ஆனால், இதே கேள்வியை பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்து வெளியே வரும் ஒரு மாணவனிடம் கேளுங்கள். "தெரியலை சார். ரிசல்ட் வந்தாதான் தெரியும்' என்பார். இன்றைய 90 விழுக்காடு சராசரி மாணவர்களின் பதில், கட்டாயமாக இப்படித்தான் இருக்கிறது.
ஏனெனில், சிறு வயதில் இருந்த தெளிவான சிந்தனை மற்றும் இலக்கு நோக்கிய பார்வை, காலம் செல்லச்செல்ல மங்கிவிடுகிறது. மதிப்பெண் ஆயிரத்துக்கு மேல் என்றால் பொறியியல் கல்லூரி, அதற்கும் குறைந்தால் கலை அறிவியல் கல்லூரி, அதற்கும் கீழே என்றால் ஏதேனும் பாலிடெக்னிக் கல்லூரி, வேறு வழியே இல்லையென்றால் ஏதாவதொரு வேலைக்குப் போக வேண்டியதுதான் என்பதே அவர்களின் சிந்தனையோட்டமாக இருக்கிறது.
படித்து முடித்துவிட்டு வரும் அனைவருக்கும் வேலை கிடைக்காமல் போவதில்லை. அந்தப் படிப்புக்குண்டான தகுதியை வளர்த்துக் கொள்ளாதவர்களுக்குத்தான் வேலை கிடைப்பதில்லை. கல்வியை வேலைக்குச் செல்லும் ஒரு "கேட் பாஸாக" பயன்படுத்தாமல், தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும், ஆளுமைத் திறனைப் பெருக்கிக் கொள்ளவும் இவர்கள் தவறிவிடுகின்றனர்.
இதில், மாணவர்களை மட்டும் குறை சொல்வதற்கில்லை. மாணவர் எந்த குறிப்பிட்ட துறையில் ஆர்வமாக இருக்கிறார் எனக் கண்டறிந்து, அவர்களை அந்தத் துறையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தும் ஆசிரியர்களோ, பெற்றோரோ, வழிகாட்டிகளோ இன்று இல்லை.
இன்று இருப்பவர்கள் கூறும் அறிவுரைகள் எல்லாம், எந்தப் படிப்பு படித்தால் லட்சங்களில் ஊதியம் பெறலாம் என்பதைக் குறிவைத்தே இருக்கிறது. இதில் மாணவரின் விருப்பத்துக்கெல்லாம் இடமில்லை.
போதாத குறைக்கு, பிளஸ் 2 தேர்வு எழுதி முடிந்தவுடன் கல்வி வழிகாட்டி, எதிர்கால வழிகாட்டி என்ற பெயரில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளும், தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன் என்ற பெயரில் மாணவர்களைக் குழப்புகின்றனர்.
இந்தப் படிப்பு படித்தால் வெளிநாட்டில் வேலை, அந்தப் படிப்பு படித்தால் லட்சக்கணக்கில் ஊதியம் என மாணவர்களையும், அவர்களின் பெற்றோரையும் ஆசை வலையில் வீழத்தி, தங்கள் கல்லூரிச் சீட்டுகளை நிரப்பி, தங்களின் "ஆள் பிடிக்கும் தந்திரங்களால்' மாணவரை விருப்பம் இல்லாத துறையைத் தேர்ந்தெடுக்க வைத்து, ஆர்வமில்லாத கல்வி கற்க வைத்து, அவரின் வாழ்க்கையை வீணாக்கிவிடுகிறார்கள்.
அனைவருக்கும் நிறைய ஊதியம் வரும் படிப்பு படிக்க வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைதான் இருக்கிறதேயொழிய, அந்தப் படிப்பு தனக்கு சரிப்பட்டு வருமா? தனது எதிர்காலத்துக்கு இதனால் பயன் இருக்குமா? என்ற சிந்தனை இருப்பதில்லை.
ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ள மாணவரை மருத்துவராகவும், இசைத் துறையில் ஆர்வமுள்ளவரை பொறியாளராகவும் ஆக்குவதால் அவர்களால் தாங்கள் விரும்பிய துறையிலும் சாதிக்கவும் இயலாமல், தாங்கள் ஈடுபட்ட துறையிலும் சிறப்பாக பணியாற்றவும் முடியாமல் தடுமாற நேரிடுகிறது.
தன் குழந்தை வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையவேண்டும் என எண்ணும் ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் குழந்தை விரும்பும் துறையில் அவரது கல்வியைத் தொடர அனுமதிக்கவேண்டும். அது கலைத் துறையாகவோ, விளையாட்டுத் துறையாகவோ, ஏன் அரசியலாகக்கூட இருக்கலாம்.
அதே நேரத்தில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் தங்களின் முத்திரையைப் பதிக்க வேண்டுமென்ற ஆர்வமுள்ள இளைஞர்களும் இன்று இருக்கிறார்கள். மாணவர்களை அவர்களை விரும்பிய துறையில் ஈடுபடுத்த இயலாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் இரண்டாவது விருப்பத்தைக் கேட்டறிந்து அதில்கூட அவர்களை ஈடுபடுத்தலாம்.
ஆனால் எந்தவொரு சம்பந்தமும் இல்லாமல் பெற்றோரின் விருப்பத்துக்காகவும், நிறைய ஊதியம் பெற்றுத் தரும் படிப்பு என அவர்களை ஏதாவது ஒரு துறையில் ஈடுபடுத்தி, அவர்களின் வாழ்க்கையை வீணாக்கிவிடக் கூடாது என்பதை மட்டும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
ஒருவர் வாழ்க்கையில் முன்னேற எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது முக்கியமல்ல. தேர்தெடுத்த துறையில் எந்தளவுக்கு கடினமாக உழைத்து முன்னுக்கு வருகிறார் என்பதில் தான் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது.
இதனைப் புரிந்து கொண்டு மாணவர்களும், பெற்றோரும் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணமிது.

No comments: